செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை புறநிலைத் தளத் தயாரிப்பும் நல்லெண்ண சமிக்ஞையும் அரசியல் தீர்வுப் பேச்சுக்கு அவசியம்  | பி.மாணிக்கவாசகம்

புறநிலைத் தளத் தயாரிப்பும் நல்லெண்ண சமிக்ஞையும் அரசியல் தீர்வுப் பேச்சுக்கு அவசியம்  | பி.மாணிக்கவாசகம்

5 minutes read

கட்டுரையாளர்- பி.மாணிக்கவாசகம்

பெரும் ஆரவாரமாக ஆரம்பித்த அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான நிலைமைகள் பிரகாசம் மங்கியிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தை குறித்த அறிவித்தலை வெளியிட்ட உடன் அதனை வரவேற்று ஆதரித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த மந்த நிலை குறித்து கவலைதோய்ந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றது.

பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியதும் அதனைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்றமைக்குக் காரணம் இல்லாமலில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்திலும், அதற்கு முன்னர் சந்திரிகா பண்டாரநாயக்கா காலத்திலும் பிரதமர் என்ற தகைமையில் அவர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளியிட்டிருந்தார். அதற்கான முயற்சிகளிலும் அவர் துணிகரமாக இறங்கயிருந்தார். இத்தகைய பின்னணியில் நிறைவேற்றதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி  என்ற தகைமையில் அவரது பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பைக் கவர்ந்திருந்ததில் வியப்பேதுமில்லை என்றே கூற வேண்டும்.

சிறுபான்மை இன மக்கள் தொடர்பிலும், அவர்களது பிரச்சினைகளிலும் என்னதான் அரசியல் மென்போக்கைக் கொண்டிருந்தாலும், அவரும் ஒரு பேரினவாதி என்பதை சிறுபான்மை இன மக்கள் மறந்துவிடலாகாது. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் மென்போக்கிற்கு பேராதரவு வழங்குகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கவனத்திற் கொண்டிருத்தல் அவசியம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கலாம், நிறைவேற்றதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாகவும் இருக்கலாம் அல்லது அதிலும் பார்க்க அதிகூடிய அரசியல் அதிகார வல்லமை கொண்டவராக இருக்கலாம். ஆனால் அவரும் இனவாதத்தில் தோய்ந்து வந்த பேரின அரசியல் தலைவர் என்பதை மறந்துவிடுதல் தமிழ்த்தரப்புக்கு நல்லதல்ல.

ரணில் விக்கிரமசிங்க என்ற அரசியல்வாதிக்கு அப்பால் அவர், ஐக்கிய தேசிய கட்சியில் நனைந்து தோய்ந்து நலிந்து மலிந்து எழுந்து வந்துள்ள நீண்டகால தலைவராவார். ஐக்கிய தேசிய கட்சியின் சிறுபான்மை இன மக்கள் தொடர்பிலான மென்போக்கு எத்தகையது என்பதை 1981 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தல்களின் பின்னணியிலான அதன் நிலைப்பாட்டையும், பின்னர்n 1983 ஆம் ஆண்டு அந்தக் கட்சி அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையில் எவ்வாறு நடந்து கொண்டிருந்தது என்பதையும் தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். அதேபோன்று தமிழ் அரசியல் தலைவர்களும் மறந்துவிட முடியாது. மறந்துவிடக் கூடாது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதென்பது பேரின அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பொறுத்த மட்டில் பூனையும் எலியையும் போன்ற விவகாரமாகும். அதாவது பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போவது என்ற நிலைமைதான். இன்னும் கூறப்போனால் அரசியல் தீர்வு என்ற பேச்சை அவர்கள் எடுப்பது ஓர் அரசியல் பொழுது போக்கிற்காக இருக்கும். அல்லது அந்தப் பேச்சை எடுப்பதன் பின்னணியில் ஏதாவதோர் அரசியல் சுயலாபம் அவர்களுக்கு இருக்கவே செய்யும். இதனை கடந்த ஏழு தசாப்த கால அரசியல்  வரலாறு ஐயந்திரிபற அழுத்தி உணர்த்தியிருக்கின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை அரசியல் தீர்மானம் மிக முக்கியமானது. நாட்டின் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய நகர்வாகும். இணைந்து வாழ முடியாது என்ற நிலையில், தமிழர்களுக்கான தனித்தாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தனிநாடு ஒன்றே வழி என்ற காரணத்தினால் தனிநாட்டுத் தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை அரசியல் வழியில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான வழித்தடம் குறித்து அன்றைய தமிழ்த்தலைவர்கள் தீர்க்கமாகச் சிந்திக்கத் தவறியிருந்தார்கள். ஆனால் கல்வியில் கொண்டு வரப்பட்டிருந்த தரப்படுத்தலினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் மிகப் பொறுப்போடு போராடுவதற்குத் தயாராகி இருந்தார்கள். அதற்கு அவர்கள் ஆயுத வழியிலான போராட்டத்தையே தெரிவு செய்திருந்தார்கள்.

இளைய தலைமுறையினரின் இந்தத் தீர்மானம் அன்றைய தமிழ் அரசியல் தலைவ்களுக்குத் தலையிடி கொடுக்கின்ற ஒரு விடயமாகவே அமைந்திருந்தது. ஆயினும் அவர்களால் இளைஞர்களின் அந்தப் போராட்ட தீர்மானத்தில் மாற்றங்கள் எதனையும் செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகியிருந்தார்கள்.

ஆனால் இத்தகைய நிலைமையை தீர்க்கமாக உய்த்துணர்ந்திருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தமிழர் விடுதலைக் கூட்டணியினரை மாவட்ட அபிவிருத்திச் சபை தீர்மானத்திற்கு இணங்கச் செய்வதில் வெற்றி கண்டிருந்தார். தனிநாடு கோரிய தமிழ்த்தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜயவர்தனவின் அரசியல் குற்ற நரித்தந்திரத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபையை அரசியல் தீர்வுக்கான முதற்படியாகவோ என்னவோ ஏற்றுக்கொண்டார்கள். 1981 ஆம் ஆண்டு அதற்கான தேர்தலில் போட்டியிடவும் அவர்கள் தயாராகியிருந்தார்கள்.

ஆனால் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தீர்மானத்தை தமிழ் இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஒப்புதல் அளித்திருந்த தமிழ்த்தலைவர்கள் மீது அவர்கள் எரிச்சலடைந்திருந்தார்கள். தனிநாட்டுக்கான தீர்மானத்தில் தமிழ்த்தலைவர்களும் தமிழ் மக்களும் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிக இறுக்கமாகக் கொண்டிருந்த பற்று மிகுந்த நிலைமையை, ஜயவர்தனா தனது குள்ள நரித் தந்திராத்தின் மூலம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற மாயமானை ஏவி, வெற்றிகரமாகக் குலைத்திருந்தார்.

மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தமிழ்ப்பிரதேசங்களில் எப்படியாவது காலூன்றச் செய்துவிட வேண்டும் என்பதற்காகப் பகீரதப் பிரயனத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் தமிழ் இளைஞர்களின் தீவிரப் போராட்டப் போக்கினால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஆயினும் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்துப் பொதுத்தேர்தலில் போட்டிpயட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை வெற்றிவாகை சூடச் செய்திருந்த தமிழ் மக்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் மிகக் கச்சிதமாக யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றினார். இதன் காரணமாகவே 1981 ஆம் ஆண்டு மே-ஜுன் நள்ளிரவில் யாழ்ப்பாணம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. யாழ் நூலகமும் பெறுமதியான ஒரு இலட்சம் புத்தகங்களுடன் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயிர்த் தப்புவதற்காக ஒடித் தப்ப வேண்டியேற்பட்டது. பலர் கொல்லப்பட்டனர். யாழ் நகரமே எரிந்து நாசமாகியது. புலர் உயிரிழந்தார்கள்.

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. தொடர்ந்து மிகத் தந்திரமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கமைய 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழர்களின் பொருளாதாரத்தைத் தீயிட்டு அடியோடு அழித்து ஒழித்தார். அவர்கள் வசித்த வீடுகளும் எரித்து அழிக்கப்பட்டன. தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வசித்து, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை ஏதிலிகளாக்கி, அகதிகளாக வடக்கு நோக்கியும் தமிழகத்தை நோக்கியும் தலைதெறிக்க ஓடித் தஞ்சமடையச் செய்திருந்தார்.

இத்தகைய பின்னணியைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பல வருடங்களாகக் கோலோச்சி வருகின்றார். நிறைவேற்று அதிகாரத்தைக் கையில் கொண்டுள்ள அவர் சுமார் மூன்று மாத காலத்தில் – 2023 ஆம் ஆண்டு தேசிய சுதந்திர தினத்துக்கு முன்னதாக அரசியல் தீர்வு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று கூறி, அது தொடர்பான ஆரம்ப கட்டப் பேச்சுக்களுக்கான திகதிகளையும் குறித்திருந்தார்.

ஆனால் அவருடைய அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் குறித்த வழித்தடம் குறித்த எந்தவிதமான குறியீடுகளும் வெளியிடப்படவில்லை. அது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தைகளை நம்பிக்கை;கு உரியதாக நடத்துவதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளையும் அவர் வெளியிடவில்லை. இன்னும் முக்கியமாக பேச்சுவார்த்தைக்கான அரசியல் சூழலை ஏற்படுத்துவதிலும் அவர் அக்கறை காட்டவில்லை. இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் பேச்சுவார்த்தை முயற்சிகள் திருப்தி அளிக்கவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறியிருக்கின்றது.

இந்த அதிருப்தியை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய தூண்களாகிய தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகிய இருவரும் வெளியிட்டிருக்கின்றனர். இறுதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சுக்களில் பேச்சுவார்த்தைக்கான சாதகமான நிலைமைகளைக் காண முடியவில்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். இதே கருத்தைக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றாகிய டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கூறியிருக்கின்றார்.

இனப்பிரச்சினை என்பது ஏழு தசாப்த காலம் புரையோடிப்போயுள்ள ஒரு விவகாரமாகும். அது தனியே அரசியல் பிரச்சினையாக அல்லாமல் தமிழ் மக்களின் தாயக மண், அவர்களின் ஆன்மீகப் பாரம்பரிய மதம் மற்றும் அவர்களின் வரலாற்;க்கால மீன்பிடி, விவசாயம் உள்ளிட்டவாழ்வதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளாக கிளைவிட்டுப் படர்ந்திருக்கின்றது.

அத்தகைய பாரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதென்பது சாதாரண விடயமல்ல. உண்மையாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருந்தால் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள பிரதேசங்களின் விடுவிப்பு, பௌத்த மதச் சின்னங்களைக் கொண்ட தொல்லியல் இடங்கள் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களைக் கைவிடுதல், காணமலாக்கப்பட்டோருக்கான பொறுப்பு கூறல், உரிமை மீறலுடன் கூடிய போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றல், மறை நிலையிலும் வெளிப்படையாகவும் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகத் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளைக் கைவிடுதல் என்று பல்வேறு நிலைகளில் நல்லெண்ண சமிக்ஞைகளை அரசு வெளியிட வேண்டிது அவசியம்.

இத்தகைய சமிக்ஞைகளின் மூலம் பேச்சுவார்த்தைக்குரிய அரசியல், சமூக நிலையிலான  தளம் ஒன்று புறநிலையில் தயார் செய்யப்பட வேண்டும். அத்தகைய முன் நிலை நடவடிக்கைகள் எதுவுமே இல்லாமல் அரசியல் தீர்வு காணப்படும் என்பதும், அதற்கான பேச்சுவர்த்தைகள் நடத்தப்படும் என்பதும் அரசியல் கேலிக்கூத்தான செயற்பாடுகளாகவே கழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More