ரம்புக்கனையில் ஐஸ் போதைப்பொருள் தகராறில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேகாலை நீதிவானின் உத்தரவையடுத்து, புதைக்கப்பட்ட உடற்பாகங்களை அகழும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் மற்றும் மொஹமட் இக்பால் மொஹமட் அஸ்ஹர் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் 18 மற்றும் 25 ஆம் திகதிகளில் இருந்து இவர்கள் இருவரும் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
இதன்படி, கேகாலை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இளைஞர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த இளைஞர்கள் ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரிடம் போதைப்பொருள் பெறச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
அங்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் போதைப்பொருள் வர்த்தகரால் இந்த இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டில் கொலை செய்யப்பட்டனர் எனக் கருதப்படும் குறித்த இளைஞர்கள், கோழிக்கூடொன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டு, அதற்கு மேல் கொங்கிறீட் போடப்பட்டிருந்தது.
அதற்கமைய குறித்த வீட்டின் சந்தேகத்துக்கிடமான அந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கேகாலை பொது வைத்தியசாலையின் நீதிவான் மற்றும் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அகழ்வு நடவடிக்கைகளின்போது, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரின் சடலம் (உடற்பாகங்கள்) நேற்று மீட்கப்பட்டதுடன் மற்றைய இளைஞரின் உடல் பாகங்களும் இன்று கண்டெடுக்கப்பட்டன.