உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி தம்மால் 10 கோடி ரூபாவை எந்தவிதத்திலும் வழங்கமுடியாது என்றும், அந்தளவு பொருளாதாரப் பலம் தமக்குக் கிடையாது என்றும் மீண்டும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் பணம் தராவிட்டால் தான் சிறைக்குச் செல்லத் தயார் என்றும் அறிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் 10 கோடி ரூபாவை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்தவிதத்திலும் எனக்கு 10 கோடி ரூபாவை வழங்கக்கூடிய பொருளாதார பின்புலம் கிடையாது. மக்கள் அதனைத் திரட்டித் தருவர் என்றே நான் எதிர்பார்க்கின்றேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்டுவதற்கு என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது. அவ்வாறு பணம் கிடைக்காவிட்டால் நான் சிறைக்குச் செல்வேன்” – என்றார்.