“நாட்டைப் பாழாக்கி மக்களைக் கஷ்ட நிலைக்குத் தள்ளிய ராஜபக்ச குடும்பத்தினரைக் கூண்டோடு சிறையில் அடைக்க வேண்டும்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
“ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்கவையும் கவனிக்காமல் விடக்கூடாது. அவருக்கும் தண்டனையை வழங்க வேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ரணில் – மொட்டு அரசைத் திருத்தவே முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும். அதன்பின்னர் காலம் தாழ்த்தாது நாடாளுமன்றத் தேர்தலையும் அரசு நடத்த வேண்டும்.
அப்போதுதான் இந்த அரசின் உண்மை முகம் தெரியவரும். மக்கள் ஆதரவு இல்லை என்ற செய்தி பகிரங்கமாகும்.
தோல்வியடைந்த இந்த அரசு ஆட்சியில் எதற்கு? ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசை அமைத்தே தீருவோம்” – என்றார்.