கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்கக்கூடிய சாத்தியம் இல்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த காலங்களில் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோர் முக்கிய சந்தர்ப்பங்களில் இணைந்து பயணித்திருந்தனர். எதிர்காலத்தில் சேர்ந்து பயணிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.
மேலும், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் 1958 ஆம் ஆண்டு கலந்துகொண்டேன். அதன் பின்னர் கலந்துகொள்வதில்லை.
தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை. எமக்கான உரிமை கிடைத்தால் மாத்திரமே கலந்துகொள்வேன்.
சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் முன்னெடுக்கும் பேரணியை வரவேற்கின்றேன்” – என்றார்.