“தேர்தலுக்கு யாரும் இடையூறு செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரசமைப்பின்படி மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க முடியும்.” –
இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இந்தத் தேர்தல் அரசுக்குத் திருப்புமுனை. அரசு மண்ணைக் கவ்வப்போகும் தேர்தல். அதனால்தான் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரசு முயற்சி செய்கின்றது.
தேர்தலை ஒத்திப்போடுவதற்குப் பல்வேறு வழிகளிலும் அரசு முயற்சி செய்து வருகின்றது. அரசு என்னதான் முயற்சி செய்தாலும் சட்டத்தின்படி தேர்தலை ஒத்திப்போட முடியாது.
தேர்தலை ஒத்திப்போட்டால் மக்கள் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்.
பொருளாதார பிரச்சினையால் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினால் அந்தப் பிரச்சினைக்குக் காரணம் இந்த அரசுதானே. அப்படியென்றால் தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றுவதன் மூலம்தான் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
பொருளாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தியவர்களால் ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ரணில் ஜனாதிபதியாகி ஏதாவது பிரச்சினை தீர்ந்திருக்கின்றதா? பிரச்சினை கூடித்தான் இருக்கின்றது.
உலகின் ஒவ்வொரு நாடுகளும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையும் போது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தித்தான் வீழ்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி இருக்கின்றன.
1979 இல் கொரியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் ஊடாக அது சரி செய்யப்பட்டது.
எதியோப்பியா – செம்பியா போன்ற நாடுகளிலும் அதே நிலைதான். ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே அது சரி செய்யப்பட்டது.
1991இல் இந்தியாவில் நடந்ததும் அப்படித்தான். இலங்கையை விட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது அந்நாடு. புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்தியா தப்பியது.
தேர்தலுக்கு யாரும் இடையூறு செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரசமைப்பின் 104 ஆம் சரத்தின்படி மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க முடியும்.
இந்த வருடம் 11 பில்லியன் ரூபாவைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்காக நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நிதி அதிகாரம் இருப்பது நாடாளுமன்றிடம்.
அந்த நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குவது நிதி அமைச்சின் செயலாளரின் கடமை. அதை அவரால் மீற முடியாது.
அவர் வழங்காமல் இருந்தால் தேர்தலுக்குத் தடை ஏற்படுத்துகின்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதாகுவார்.
அப்படியென்றால் அவருக்கு எதிராக அரசமைப்பின் 104 சரத்தின்படி அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அவருக்கு மூன்று வருட தண்டனை வழங்க முடியும்.
அடுத்த வழக்கு விசாரணையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதியை வழங்குமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிடும் என்று நாம் நம்புகின்றோம்.
அதேபோல் உள்விவகார அமைச்சின் செயலாளர் கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
அவரும் தேர்தலுக்குத் தடை ஏற்படும்வகையில்தான் செயற்பட்டுள்ளார். அவருக்கும் மூன்று வருட சிறை தண்டனை வழங்க முடியும்” – என்றார்.