முறையற்ற வரி திருத்தத்தை அரசு திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் நாடு முழுவதும் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
மேற்படி தரப்பினர், கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு அரசுடம் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.
அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வளவு அதிக வரி விதிப்பது நியாயமற்றது என்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்தோர் கூறுகின்றனர்.
தங்களது கோரிக்கையை அரசு தொடர்ந்தும் புறக்கணித்தால் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.