கட்டுரையாளர் வதிலைபிரபா
தொடர் அதிர்வுகளைத் தந்த “மகாகவி” 1996 -ஆம் ஆண்டு இறுதியில் மலர் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டது. இளம் – புதிய எழுத்தாளர்களில் நம்பிக்கையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தொடர் வாய்ப்பும் தந்தது. “இளம் – புதிய படைப்பாளர்களுக்கான களம்” என முகப்பில் முத்திரையுடன் வெளிவந்த ஆண்டுமலர்97 பெரும் வரப்பேற்பைப் பெற்றது.
ஏற்கனவே தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தில் 1996 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்களில் தமது உறுப்பாண்மையைப் பதிவு செய்த மகாகவி சங்க உறுப்பிதழாகத் தொடர்ந்தது. மீண்டும் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பின்னாளில் சங்க வளர்ச்சி பற்றிய வடிகட்டிய பொய் ஒன்றைக் கட்டவிழ்க்கிற கூட்டம் ஒன்று இருக்கிறது / இருந்தது என்பதை அறிந்ததால் ஆதாரத்தோடு இந்தத் தொடர் வெளிவருகிறது என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். ஆனாலும், சங்கத்தில் இணைந்த மகாகவி ஆசிரியர் வதிலைபிரபா பின்னாளில் அச் சங்கத்தை வழி நடத்துவார் என்பதை அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அதை நோக்கிய பயணமும் அவருக்கில்லை. எந்தப் புள்ளி அவரை சங்கத்தில் இணைத்தது என்பதைத் தொடரைத் தொடர்ந்து வாசிக்கிறவர் புரிந்து கொள்வர்.
“தமுஎச, கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஜால்ரா’ இதழ்களோடு ‘மகாகவி’யையும் சேர்க்கலாமா?” என்று எந்த நேரத்தில் மௌனதீபன் கேட்டாரோ தெரியவில்லை.. “எந்த வலைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், எந்த வட்டத்திற்குள்ளும் சுருக்கிக் கொள்ளாமல்..” என்று தொடங்கி “முற்போக்குச் சிந்தனை – இலக்கியம் – இயக்கம் ஆகியன துணையுடன் துடுப்புடன் பயணப்படவே எத்தனிக்கிறோம்” என்ற ஓர் அறிவிப்புடன் 1997 – ஆம் ஆண்டினைத் தொடங்கியது. அது ஆண்டு மலராகத் தொடர்ந்தது.
ஆண்டு மலருக்கென ஒரு கடிதம் வந்தது. அது முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய கடிதமாக இருந்தது. இந்தச் சலனமுமில்லாமல் தொடர்ந்து இயங்குகிற எங்களுக்கு அது ஓர் உற்சாகம் தருகிற ஒன்றாக இருந்தது. மிகச் சரியாக எங்களைப் புரிந்த வல்லிக்கண்ணன் கடிதம் எங்களின் இதழியக்கத்தை மேலும் முடுக்கியது. இனியென்ன ஓட்டம்தான்..
இதோ! அந்தக் கடிதம்…
அன்பு நண்பருக்கு, வணக்கம்.
மகாகவி’ ஆண்டு மலர் தயாராவதை அறிந்து மகிழ்கிறேன்.
கவிதை உணர்வு ஊற்றுப்போல் பொங்கிப் பிரவாகிக்கிறது எங்கும். விதம் விதமான கவிதை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இளைஞர்கள் உற்சாகமாகக் கவிதை புனைகிறார்கள். அவரவர் உணர்வுகளையும், உள்ளத்தின் எழுச்சிகளையும், அனுபவங்களையும் ஆசைகளையும் கனவுகளையும் எழுத்தில் பதிவு செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுடைய : ஆற்றலும் உற்சாகமான உழைப்பும் வெளியே தெரியவருவதற்கு ‘மகாகவி’ போன்ற சிற்றிதழ்கள் உதவுகின்றன. ‘மகாகவி’யின் பணி வரவேற்புக்கும் போற்றுதலுக்கும் ‘உரியது. ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் எழுதிக் கொண்டிருக்கிற கவிஞர்களின் படைப்புகள் உரியமுறையில் தெரியவருவதற்கு ‘மகாகவி’ களம் அமைத்துத் தருவதன் மூலம், இளைஞர்களின் வளர்ச்சிக்கும், வளரும் கவிதையின் வளத்துக்கும் நல்லமுறையில் துணைபுரிகிறது. ‘மகாகவி’யின் பணி சிறக்கட்டும். வாழ்த்துகள்.”
கடிதத்தை ஆண்டுமலரில் வாழ்த்துரையாக வெளியிட்டோம். ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முதலில் கசக்கும்; பின்னர் இனிக்கும்’ என்பார்கள். எங்களுக்கு முதலிலிருந்தே இனிப்புதான்.. வல்லிக்கண்ணன் சொற்கள் இனிப்பு மட்டுமல்ல. பெரும் பழத் தோட்டத்தையே எங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியது.. அப்புறமென்ன, அந்த நாள் எங்களுக்கு இனிய நாள்தான்..! வல்லிக்கண்ணன் எனும் இயக்குவிசை இருக்க, இயங்கினோம்… இயங்கிக்கொண்டே இருந்தோம்..
வதிலை பிரபா