இலங்கை மின்சார சபை வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின் கட்டணத்தை இன்று முதல் 400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த முடிவுக்குத் தான் அனுமதி வழங்கவில்லை என்றும், இருப்பினும் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களின்
ஆதரவுடன் இலங்கை மின்சார சபையும் எரிசக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சரும இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
”ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் எனது அனுமதி இல்லாமல் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் மின்கட்டணத்தை இன்று முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழவின் மூன்று உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்” என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் எனவும் அவர் அறிவித்தார்.
பொதுவாக மின் கட்டணம் 65 வீதம் அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டாலும் 30, 60 மற்றும் 90 மின் அலகு என்ற அடிப்படையில் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டு மின் பாவனையாளர்களின் கட்டணம் 400 சதவீதத்தால்
அதிகரிக்கப்போகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் பெரும்பான்மையான வீடுகள் இந்த மின் அலகுகளுக்குளேயே மின்சாரப் பயன்பாட்டைக் கொண்டுள்ளன. அதனால் குடும்பங்களின் மின் கட்டணம் எகிறப் போவதுடன், பொருட்களின் விலைகளும் மீண்டும் உயரப் போகின்றது என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.