“மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபயவின் பெயரில் படை முகாம் எதற்கு?” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இரா.சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வீதியின் இரண்டு பக்கங்களிலும் மக்களைக் காண முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நாம் மக்களைப் பார்க்க வேண்டும் என்றால் இராணுவ முகாம்களைத்தான் முதலில் பார்க்க வேண்டியுள்ளது.
வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.
எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளான இணைந்த வடக்கு, கிழக்கு என்பது நிச்சயமாகச் சாத்தியமாக வேண்டும். அப்படிச் சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” – என்றார்.