தேசிய ரக்பி லீக் சம்பியன்ஷிப் தொடரான நிப்பொன் பெயிண்ட் சவால் கிண்ணத்தை தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாக கைப்பற்றி மொத்தமாக 24 தடவைகள் சம்பியன் மகுடத்தை தை கண்டி ரக்பி கழகம் சூடிக்கொண்டது.
கடந்த ஞாயிறன்று (19) மாலை நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் சீ.ஆர். & எப்.சீ. அணியை 29-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றதன் மூலம் இந்த மகுடத்தை கண்டி ரக்பி கழகம் சூடிக்கொண்டது.
நாட்டின் முன்னணி 8 முன்னணி ரக்பி விளையாட்டு கழகங்கள் பங்கேற்றிருந்த நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வருட போட்டியில் பாசில் மரீஜாவின் பயிற்றுவிப்பின் கீழ் போட்டியிட்ட கண்டி கழகம் தோல்வியடையாத அணியாக சம்பியன் பட்டத்தை வென்றமை விசேட அம்சமாகும்.
போட்டியின் முதல் பாதி முழுவதும் தம்வசப்படுத்தியிருந்த கண்டி ரக்பி கழகம் 10 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி போட்டியின் முழு நேர முடிவில் 29 க்கு 10 என்ற கணக்கில் வெற்றியீட்டியது.
லவங்க பெரேரா , கவிந்து பெரேரா , தரிந்த ரத்வத்த , யாகூப் அலி , ஆசிரி செனவிரத்ன ஆகியோர் தலா ஒரு ட்ரைகளை வைத்து கண்டி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதில் தரிந்த ரத்வத்த, 3 கொன்வெர்ஷன்களையும் ஒரு பெனால்டி உதையையும் எதிரணி கோல் கம்பங்களுக்கு இடையே போட்டு தமது அணிக்கு புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
மறுபுறத்தில் தேனுக நாணயக்கார மற்றும் சத்துர செனவிரத்ன ஆகியோர் சீ.ஆர்.& எப்.சீ. கழகத்திற்கான 10 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தவர்கள் ஆவர்.