ஜூடோ கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவரே ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின்.
எனினும், ஜூடோ போட்டியொன்றில் சிறுவன் ஒருவனால் பூட்டின் தோற்கடிக்கப்பட்டு, தூக்கிவிசப்படுவது போன்று சித்தரிக்கும் ஓவியம் ஒன்று, உக்ரேனில் வரையப்பட்டுள்ளது.
உக்ரேன் தலைநகர் – கீவுக்கு அருகேயுள்ள போரோடியங்கா (Borodyanka) என்ற கிராமத்தில் ரஷ்யத் தாக்குதலால் சிதைவடைந்த வீடு ஒன்றின் சுவரில் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் பாங்க்ஸியின் (Banksy) என்பரே அதனை வரைந்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரேனியர்களின் கடும் எதிர்ப்பை அந்த ஓவியம் சித்திரிப்பதாக உக்ரேனியர்கள் பலர் கருதுகின்றனர்.
இதனையடுத்து, ரஷ்ய – உக்ரேன் போர் ஆரம்பமாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டதைக் குறிக்கும் பொருட்டு, உக்ரேன் வெளியிட்ட சிறப்பு முத்திரையில், மேற்படி ஓவியம் இடம்பிடித்துள்ளது.
தற்போது, அந்த முத்திரையை வாங்க உக்ரேனியர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என AFP சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், வெளியிடப்பட்டுள்ள சிறப்பு முத்திரையில் அந்த ஓவியத்துடன் புட்டினைச் சாடும் சொற்களும் இடம்பெற்றிருப்பதாக BBC செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.