“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டவாறு திறைசேரிச் செயலர், பொலிஸ்மா அதிபர், அரசாங்க அச்சகத் தலைவர் ஆகியோருடன் இன்று கலந்துரையாடல் நடைபெறும்” – என்று தேர்தல்கால ஆணைக்குழுவின் தவிசாளர் நிமால் புஞ்சிஹேவ தெரிவித்தார்.
“கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தலுக்கான நிதியை திறைசேரி உடனடியாக விடுவித்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த மாதம் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். திறைசேரிச் செயலர் மஹிந்த சிறிவர்த்தன, தேர்தல்களை நடத்துவதற்கு போதிய நிதியை வழங்குவதாக உறுதியளித்தால், இன்று முற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்தலுக்கான குறுகிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தயாராக இருக்கின்றது” என்றும் புஞ்சிஹேவ குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தேர்தல்கள் ஆணைக்குழுவால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியுமா, இல்லையா என்று, என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான நிதி கிடைப்பதைப் பொறுத்தே அதைக்கூற முடியும். இன்றைய கலந்துரையாடலில் போதிய நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி பொறுப்பேற்றால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இப்போது பந்து திறைசேரியின் கைகளில் உள்ளது. தேர்தலுக்கு நிதியை விடுவிப்பதில் தாமும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதற்குப் போதுமான பணம் இல்லை எனவும் திறைசேரி கூறலாம். அவர்களால் சில மாதங்களிலேயே நிதியை விடுவிக்க முடியும் எனக் கூறலாம். ஆனால், இந்த மாதிரியான சூழல் இன்று உருவாகும் என்று நான் நினைக்கவில்லை” – என்றார்.
திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பு 25 மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மூலம் நாளை புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும்.
இதேவேளை, திறைசேரிச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடி தேர்தல் திகதியைத் தீர்மானிக்கத் தேவையில்லை என்ற எதிர்க்கட்சிகள் கடிதம் மூலம் கோரியிருந்த நிலையில் அதனைப் பொருட்படுத்தாது ஆணைக்குழு இன்று சந்திப்பில் ஈடுபடவுள்ளது.