செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிவன் ஆலயம் இடிப்பு இனவாதத்துக்கு எடுத்துக்காட்டு! – அருட்தந்தை காட்டம்

சிவன் ஆலயம் இடிப்பு இனவாதத்துக்கு எடுத்துக்காட்டு! – அருட்தந்தை காட்டம்

2 minutes read

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலிகாமம் வடக்கு பிரதேச போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்குத் துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது.

இத்தகைய நாகரிகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையகத் தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாகக் கண்டிப்பதோடு துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு நாமும் நிற்கின்றோம் எனக் கூறுவதோடு அரசு இந்து மக்களிடத்தும், தமிழ் மக்களிடத்தும் இந்தச் செயல் தொடர்பாக மன்னிப்புக் கோருவதோடு அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றி அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசம் என்பது பாதுகாப்பான பிரதேசம் என்று பொருள்படும். அத்தகைய பிரதேசத்தில் பயங்கரவாதச் செயலுக்கு இடம் உண்டா? இராணுவத் தேவைக்கு அப்பால் கட்டடம் நிர்மாணிக்கப்படுமாயின் அதற்கு அனுமதி அளித்தது யார்? அத்தகைய கட்டடம் அமைக்கத் தொன்மை வாய்ந்த இந்து ஆலயத்தை அழிப்பதற்கு அனுமதி அளித்தது யார்? தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்ததா? எத்தகைய அனுமதியும் இல்லாத கட்டடம் அமைக்கப்பட்டு தொன்மை வாய்ந்த ஆலயம் அழிக்கப்பட்டிருப்பின் அவ்வாறு செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா? நிறுத்தப்பட்டாலும் நீதி கிடைக்குமா? என்பதே எம்மை சூழ்ந்துள்ள கேள்விகள்.

வடக்கு, கிழக்கின் பிரதேசங்களைத் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முனைவதும், சிங்கள பௌத்த பிரதேசங்களாக அடையாளப்படுத்த முனைவதும் நாம் அறிந்ததே.

நாட்டின் எல்லாச் சந்திகளிலும், உயர்ந்த மலைகளிலும் புத்தர் சிலைகளை அமைக்கும திட்டமிட்ட செயல் தொடர்கின்றது. மலையகப் பிரதேசதந்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்தச் செயற்பாடு தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றது.

இவற்றுக்கும் மேலாக குருந்தூர்மலைப் பிரதேசத்தில் எத்தகைய கட்டட பணிகளும் நடக்கக் கூடாது எனும் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை அமைக்கும் பணி முடிவுறு நிலையில் உள்ளது. இதுவும் இராணுவத்தின் உதவியுடன் என்பது தெரியவந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் தொல்லியல் திணைக்களம், நீதித்துறை என்பன சட்டங்களுக்கு வெளியில் என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாட வடக்கு, கிழக்கு நோக்கிப் படையெடுக்கும் பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்களின் நிலங்களைத் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவது தொடர்பாகவோ, குருந்தூர்மலை விடயமாகவோ, கீரிமலை சிவன் ஆலயம் சம்பந்தமாகவோ குரல் கொடுக்கப் போவதில்லை.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் சக்திகளும், அவர்களுக்குப் பின்னால் செல்லும் மக்களும் தமிழர்களின் தேசியம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் சாபத்தை அனுபவிக்க வேண்டி நேரிடும்.

நாம் மீண்டும் ஆட்சியாளர்களிடம் கேட்கின்றோம். கடந்த 75 ஆண்டு காலமாகச் செய்து வரும் இன அழிப்பு போதாதா? இன்னும் எவற்றையெல்லாம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள்? தமிழர்கள் தங்களையும், தங்களுடைய அடையாளத்தையும், நிலத்தையும் பாதுகாக்க எத்தகைய போராட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

நாட்டின் தற்போதைய நிலைக்கு உங்களின் இனவாத யுத்தமே காரணம் என்பதை இன்னும் உணர மறுப்பதேன்? தற்போதைய சிவன் ஆலய சம்பவம் தேசத்துக்கான போராட்டத்தை இன்னும் கூர்மை அடையவே செய்யும்” – என்றுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More