யாழ்ப்பாணம் நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
உயிர்மாய்ப்பு முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக மருத்துவமனை வட்டரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று நண்பகல் மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் பாடசாலையிலுள்ள மாடிக் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். தெய்வாதீனமாக அந்தக் கட்டடத்துக்கு நேர் எதிராகவுள்ள ஆலயத்துக்கு முன்பாகவுள்ள செல்லும் மின்மார்க்க வயர்களில் சிக்குண்டதன் காரணமாக மாணவன் நேரடியாக நிலத்தில் விழாததால் உயிராபத்து தவிர்க்கப்பட்டது. சக மாணவர்காளலும், ஆசிரியர்களாலும் மீட்கப்பட்ட மாணவன் உடனடியாக அம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவனின் காற்சட்டையிலிருந்து ஒரு கடிதம் மீட்கப்பட்டது. அதில், தனது உயிர்மாய்ப்பு முயற்சிக்கான விரிவான கடிதம் பாடசாலைப் புத்தகப் பையில் இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாணவனின் புத்தகப் பையைச் சோதனையிட்டபோது அதில், அவனுடைய உயிர்மாய்ப்பு முயற்சியை நியாயப்படுத்தும் வகையிலான 7 பக்கங்களைக் கொண்ட மிக நீண்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
‘ப்ளூவேல்ஸ்’ என்கின்ற இணைய விளையாட்டில் ஈடுபடுவதாகவும், அதில் தன்னுடன் விளையாடுபவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். அந்த விளையாட்டில் தோல்வியடைந்தமையால் தன்னைக் கொல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்படி மாணவன், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் காயமேற்படுத்திக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவன் குறிப்பிடும் ‘ப்ளூவேல்ஸ்’ என்கின்ற இணைய விளையாட்டில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.