பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்தாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹதியாவுக்குக் கடுமையான நிபந்தனைகளுடனான பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 25 இலட்சம் ரூபா அடங்கலான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணை நிற்பவர்கள் மற்றும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி ஆகியோர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் மே மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.