1
தலைகீழாகப் பாயும் மீனாக
கண்ணீர் எங்கே செல்கிறது
இன்னும் எவ்வளவு காலம் மதிலுகள்
மதகு போல் திறந்து
இரவை அடித்துக் கொண்டு செல்லும்
மனதின் கொக்கியில் மாட்டிக்கொண்ட சொல்லை எப்பகல் மீட்கும்
மூன்று சிறகுடைய பறவை
கால் நூற்றாண்டுகாலத் தனிமையை
கழுத்து வலிக்கச் சுழற்றியபின்னும்
என் கேவல்களை என்ன தான் செய்யப்போகிறது
கைவசம் சிறு பென்சில் துண்டும்
காதற்ற இதயமும் ஒரே ஓசையில் நகர்கிறது
கார்பன் குச்சி
தன்னிகரில்லாத் துணை தானோ
புல்லெடுத்துப் புல்நிமிர்த்திப் புல்வளைத்து
தேர்ச்சிபெற்றத் தூக்கணாங்குருவி போல
எப்படிப் பறந்து வருகிறது பகல்
உள்ளிருக்கும் ஒரு துண்டுக் காற்று ஆவியாக
எவ்வளவு வாழ்வில்
கொதிக்க வேண்டியிருக்கிறது
மரண அவஸ்தைக்கு எழுதப்பட்ட
மருத்துவக் குறிப்பாய் மனம் ஆடுகிறது
மேலும்
நசுக்கபட்ட எறும்பின் ஊனப்பட்ட காலைவிட மிகவும் மெலிந்து துடிக்கிறது
•
– தேன்மொழி தாஸ்
21.12.2018
3.33 am