கள்ளக்குறிச்சி, வளையாம்பட்டு பகுதியில் கைம்பெண்ணான தமது தாய்க்கு இரு மகன்கள் மறுமணம் செய்துவைத்துள்ளனர்.
பெரியாரின் மறுமணம் குறித்த எழுத்துகள், கலைஞருடைய எழுத்துகளை வாசிப்பது, அது குறித்து விவாதிப்பது எனத் தொடர்ந்துகொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில், “நம் வீட்டிலும் அம்மா கணவரை இழந்து தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக்கூடாது?” எனச் சிந்தித்து, தாய்க்கு மறுமணம் செய்து வைத்ததாக மூத்த மகன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அண்ணனின் இந்த ஆலோசனைக்கு தம்பியும் எந்தவித ஆட்சேபனையும் இன்றிச் சம்மதித்ததாக அவரது தம்பி விவேக் தெரிவித்துள்ளார்.
“வெறுமனே யாராவது மனைவியை இழந்தவரைத் தேடிப்பிடித்து, அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்து கடமையை முடிக்க நாங்கள் நினைக்கவில்லை.
“அவருக்காகத் தேடும் நபருடன் அவரை சில நாட்களுக்குப் பேசிப் பழகுமாறு கூறினோம். அம்மாவுக்கு சரி எனப்பட்டால் மேற்கொண்டு பேசலாம் என நினைத்தோம். அந்த முயற்சியில் இப்போது மணந்துள்ள அப்பாவை அம்மாவுக்குப் பிடித்ததால் அவர்கள் மறுமணம் செய்துகொண்டார்கள்,” என்றும் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மறுமணம் குறித்து அவர்களது தாய் செல்வி தெரிவித்துள்ளதாவது,
“அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா என்று கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“அதேநேரத்தில், கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் தனி ஆளாக தன் பிள்ளைகளை வளர்த்து வரும் இந்தச் சமூகத்தில் யாருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை என் மகன்களுக்குத் தோன்றியதை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது.
“மறுமணம் செய்வதற்கு உனக்கு வந்த தைரியம் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று என்னைவிட மூத்த பெண்கள் பலர் என்னிடம் கூறியுள்ளார்கள். நானும் கணவரை இழந்து தனியாக வாழும் பல இளம் பெண்களுக்கு இதுகுறித்துப் பேசி நம்பிக்கையூட்டி வருகிறேன்,” என்கிறார்
மேலும், “என்னைப் போல் கணவரை இழந்தவர்கள் தைரியமாக முடிவெடுத்து, இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நான் அனுபவத்தில் சொல்கிறேன், என்னைப் போன்ற பெண்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான உணர்வுகளை மறைத்துக்கொண்டு பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.
“அப்படி வாழ்வது மிகவும் கடினம். அத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊர் என்ன சொல்லும் என்றே நினைத்துக் கொண்டிருக்காமல் அவரவர் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்,” எனக் கூறுகிறார்.
மூலம் – பிபிசி