செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா செங்களம் | இணைய தொடர் விமர்சனம்

செங்களம் | இணைய தொடர் விமர்சனம்

3 minutes read

தயாரிப்பு: அபி & அபி என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள்: கலையரசன், வாணி போஜன், ஷாலி, சரத் லோகித்தாஸ்வா, பிரேம், டேனியல் அனி போப், லகுபரன், கஜராஜ், அர்ஜய், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், விஜி சந்திரசேகர் மற்றும் பலர்.

இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன்

மதிப்பீடு: 3 / 5

வெளியீடு: ஜீ 5

‘அயலி’ என்ற இணைய தொடரின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து ஜீ 5 என்னும் டிஜிட்டல் தளத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்த இணைய தொடராக ஒன்பது அத்தியாயங்களுடன் ‘செங்களம்’ வெளியாகி இருக்கிறது. இந்தத் தொடர் டிஜிட்டல் தளப் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? இல்லையா? என்பதனைத் தொடர்ந்து காண்போம்.

அரசியல் என்பதும்… அரசியல் களம் என்பதும்… அதிகாரமிக்க அரசியல் ஆதிக்கம் என்பதும்… ஆண்களிடத்தில் மட்டுமே இருக்கிறது. இது பல நூறு ஆண்டுகளாக தமிழ் சமூகத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய மனித சமூகத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிம்பம். இதன் வலிமை தனித்துவமானது.

ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அரசியலில் பெண்களும் பங்கு பற்றி… அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால்.. அதற்காக அரசியல் சதுரங்கத்தில் எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை நுட்பமாகவும், தமிழக அரசியல் வரலாற்றினை சான்றாகவும் கொண்டு ‘செங்களம்’ எனும் இணைய தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திராவிட அரசியல்… கடந்த மூன்று தசாப்த தமிழக அரசியல்… தமிழக நகரான விருதுநகர் எனும் நகராட்சி தலைவர் பதவியை நாற்பது ஆண்டு காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் அரசியல் பின்னணியையும், அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதற்காக கையாளும் தந்திரங்களையும்.. திரைக்கதையாக இயக்குநர் விவரித்திருக்கிறார்.

நகராட்சி தலைவர் பதவி மற்றும் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் ஆகியவற்றை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு குடும்பத்தின் முழு நேர அரசியல் விளையாட்டை…, அவர்களின் ஆதிக்கத்திலிருந்து விருதுநகர் நகராட்சியை மீட்கவும், குடும்ப அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஆளும் கட்சி உதவியுடன் தனி நபராக நாச்சியார் எனும் கதாபாத்திரம் முயற்சிக்கிறது.

‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை’, ‘அரசியல் மூலமாக கிடைக்கும் அதிகார போதை எதையும் செய்ய துணியும்’ என்ற இரு விடயங்களை மையப்படுத்தி இந்த ஒன்பது அத்தியாயங்கள் வரையிலான இணைய தொடராக நீண்டிருக்கிறது.

ஒவ்வொரு தொடரிலும் கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நிகழ்வுகளையும் துல்லியமாக இணைத்து கதை சொல்லும் உத்தி… பாமர பார்வையாளர்களை வசப்படுத்தி இருக்கிறது. ஆனால்  நாச்சியார் எனும் கதாபாத்திரம் செல்வந்த நிலையை எட்டியது எப்படி? என்பது குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்படாததால் உச்சகட்ட காட்சியில்… அந்த கதாபாத்திரம்.. நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஸ்வீட் பொக்ஸ்களை எப்படி வழங்க முடிந்தது? என்ற வினா எழுகிறது. நகர்மன்ற தலைவர் பதவிக்கு இருபது உறுப்பினர்கள் வாக்களிப்பதை  நீளமாக காட்சிப்படுத்தி இருப்பது… பதற்றத்தை வரவழைப்பதற்கு பதிலாக சோர்வையே உண்டாக்குகிறது.

அரசியலில் ஆர்வமுள்ள பெண்மணி, அதிகாரத்தைக் கைப்பற்ற ஆண்களுக்கு எதிராகவும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரி கட்சிகள் போன்ற அரசியல் கட்சியின் நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களையும்.., எப்படி புத்திசாலித்தனமாக சூழ்ச்சி செய்து, திட்டமிட்டு காய் நகர்த்தி வெற்றி பெறுவது படைப்பிற்காக சரி என்று ஒப்புக்கொண்டாலும்… தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

உள்ளூராட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற பணம் மட்டுமே போதும் என்ற நிலைபாட்டை முன்னிலைப்படுத்தி இருப்பது… நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் ஆரோக்கியமான அரசியல்வாதிகள்  உருவாவதற்கு தடைக்கல்லாக இருக்கிறது. இவ்விடயத்தில் இயக்குநரும், கதாசிரியரும் கதாபாத்திர சமநிலையை பேணி இருக்கலாம். இது பார்வையாளர்களிடத்தில் அரசியல் குறித்த எதிர் நிலையான எண்ணத்தையே வலிமையாக விதைக்கும்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பது போல்…, அரசியலில் ஒரு பெண்மணி வெற்றி பெற வேண்டும் என்றால் அவரின் பின்னணியில் ரத்த உறவுள்ள ஆண்கள் இருக்க வேண்டும் என்று காட்சிப்படுத்தி இருப்பது ஆண்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சூரியகலா ராஜமாணிக்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜனின் நடிப்பை விட, நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷாலியின் நடிப்பு நிறைவைத் தருகிறது. சூரியகலா- நாச்சியார் இருவரும் தோழிகள். இதில் நாச்சியாரின் சகோதரரான ராயர், சூரியகலாவை காதலிக்கிறார் இன்று காட்சிப்படுத்தி இருப்பது… சூரிய கலாவை அரசியல் சதி செய்து கொன்றவர்களை ராயர் பழி வாங்குவதற்கான ஒரு உத்வேக புள்ளியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் பின்னணியில் அவருடைய  தங்கையின் பங்களிப்பு இருக்கிறது என்று தெரிந்த பிறகு, அவர் எடுக்கும் முடிவு கதாபாத்திரத்தின் நிறைவின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

சிவஞானம் எனும் கதாபாத்திரம் முதுமையின் காரணமாக சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்துகிறார்… என குறிப்பிட்டிருப்பது, சூரிய கலா எனும் கதாபாத்திரம் ‘மக்களுக்காக நான்.. மக்களால் நான்..’ என மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா மேடையில் பயன்படுத்திய வசனத்தை பேசுவது.. இப்படி ஏராளமான குறியீடுகள் தமிழக அரசியலிலிருந்து எடுக்கப்பட்டு படைப்பிற்காக கையாளப்பட்டிருந்தாலும்.. ஒரு பிரிவு ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வழங்கக்கூடும்.

ஒன்பது அத்தியாயங்களாக நீளும் இந்த பொலிட்டிக்கல் திரில்லர் ஜேனரிலான இணையத் தொடரை ஒளிப்பதிவாளர் வெற்றி மகாலிங்கம், இசையமைப்பாளர் தரண்குமார் இருவரும் இணைந்து தங்களது கடின உழைப்பை வழங்கி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்கள்.

செங்களம் – பெண்மணியின் அரசியல் அதிகார பேராசை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More