அமரர் கல்கி எழுதி, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாரான ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘சீயான்’ விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா முதன்மையான வேடத்திலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், அஸ்வின், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெற்றது. தென்திசை நோக்கி கடல் வழி பயணம் மேற்கொண்ட அருள்மொழிவர்மனை கைது செய்து அழைத்து வருமாறு சோழ அரசின் உத்தரவு ஒருபுறம்… பொன்னியின் செல்வனை பாதுகாப்புடன் சோழ தேச தலை நகரத்திற்கு அழைத்து வருமாறு இளவரசி குந்தவை நாச்சியார், வந்திய தேவனுக்கு ஆணையிடுவது ஒரு புறம்..
சிங்கள தேசத்தில் பயணம் மேற்கொண்டிருக்கும் அருள்மொழிவர்மனை அங்கேயே தாக்கி அழித்துவிட வேண்டும் என பாண்டிய மன்னர்களின் ஒற்றர்கள் முயற்சிப்பது ஒரு புறம்… சிங்கள தேசத்து வீரர்கள் அருள்மொழிவர்மனை வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சிப்பது ஒரு புறம்..
பொன்னியின் செல்வனுக்கு அரணாக முகம் காட்டாத வெள்ளுடை தேவதை ஒருபுறம்.. என ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் நிறைவடைய.., இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மார்ச் மாதம் 29ஆம் திகதி அன்று முன்னோட்டம் வெளியாகிறது.
‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமானின் இசையில் ‘அகநக..’ எனத் தொடங்கும் இரண்டாம் பாகத்திற்கான முதல் பாடல் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே ‘பொன்னியின் செல்வன் 2’ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.