ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தாலும்கூட அதையெல்லாம் மறந்து மைத்திரிபால சிறிசேனவை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதை அறியமுடிகின்றது.
அரசுடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களே இந்த ஒப்பரேஷனில் இறங்கியுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் மைத்திரியைச் சந்தித்து இந்த விவகாரம் பற்றி விரிவாகப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் விளைவாக ரணிலும் மைத்திரியும் நாடாளுமன்றில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை அந்த எம்.பிக்களே செய்தனர் என்று அறியக் கிடைத்துள்ளது.
அந்தச் சந்திப்பின்போது அரசில் இணைவதற்கான தனது விருப்பத்தை மைத்திரி தெரிவித்தார் என்று மைத்திரியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்துதான் இப்போதெல்லாம் மைத்திரி மீண்டும் சர்வகட்சி அரசு பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
ரணிலின் அரசுடன் இணைவதற்கு சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கடும் எதிர்ப்பை வெளியிட்டு
வருகின்றார். அரசுடன் இணைந்துள்ள சு.க. உறுப்பினர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் முடிவை எடுத்ததும் அவர்தான்.
அண்மையில் வெளிநாடு சென்றிருந்த தயாசிறி, சில தினங்களுக்கு முன்னர்தான் நாடு திரும்பியிருந்தார். அந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தித்தான் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றன.
விரைவில் அரசுடன் மைத்திரி இணையும் செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.