ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் ஒரு வருடத்தை கடந்தும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிநவீன ட்ரோன்கள் மூலம் அதிகப்படியான தாக்குதல்களை இரண்டு நாடுகளும் தற்போது நடத்தி வருகின்றன.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த ஒரு வருடத்தில், இத்தகைய அதிநவீன ட்ரோன்கள் போரின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதாக போர் குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர் நாட்டு வீரர்கள் பதுங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிதல், டேங்கர்கள் மீது சிறிய குண்டுகளை வீசி பெரும் சேதத்தை விளைவித்தல் போன்றவை ட்ரோன்கள் மூலம் நடத்தப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
க்ரோன்ஸ்டட், ஆர்லன் 10, எலரான் 3 உள்ளிட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவும், பேரக்டர், DJI மேவிக், ஸ்விட்ச் ப்ளேடு போன்ற இலகு ரக ட்ரோன்கள் மூலம் உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளவில் சிறியதாக இருப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும் ட்ரோன் தாக்குதல்கள் அதிக அளவில் இடம் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு, இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டாலும், ட்ரோன்கள் தாக்குதலால் ரஷ்யாவை விட உக்ரைனே அதிக பலனைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.