இருவேறு இடங்களில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தட்டுவன பகுதியில் குடும்பஸ்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது
தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இராஜகிரிய – பண்டாரநாயக்கபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பொல்லால் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கொத்தடுவ பொலிஸார், கொலையைச் செய்த சந்தேகநபர்களைத் தேடி வருகின்றனர்.