இலங்கை அரசின் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது அடிப்படை மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே, இந்த யோசனையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் தரத்தை நிலைநிறுத்துகின்றது என்பதை ஆலோசனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
“தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான விமர்சனங்களைத் தொடர்ந்து, அதனை மாற்றியமைக்க இலங்கை அரசு உறுதியளித்தது.
எனினும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, சொத்து சேதம், திருட்டு அல்லது கொள்ளை போன்ற குற்றங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்தின் வரையறையை இந்த யோசனை விரிவுபடுத்துகின்றது.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கான உரிமைகளையும் இது கட்டுப்படுத்துகின்றது.
இந்தநிலையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், அமைதியான விமர்சகர்களை மௌனமாக்குவதற்கும் சிறுபான்மையினரைக் குறிவைப்பதற்கும் இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும்” – என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2023, மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனை, 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பரவலான சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கு வழிவகுத்த இழிவான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் நோக்கம் கொண்டது.
இந்தப் புதிய யோசனையில் சில முன்னேற்றங்களும் உள்ளன.
இலங்கை செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, வெளிநாட்டு அரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, உரிமைகளை மதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பலமுறை உறுதியளித்துள்ளன.
அந்தவகையில், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது 2018 இல் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு யோசனை சர்வதேச தரநிலைகள் எதையும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சர் கையொப்பமிட்ட உத்தரவின் பேரில், அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய ஒருவரை, ஓராண்டு வரை காவலில் வைக்க முடியும்.
முன்மொழியப்பட்ட புதிய யோசனை, பொலிஸ் துணை ஆய்வாளர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்க அதிகாரம் அளிக்கின்றது. இது துஷ்பிரயோக அபாயத்தை அதிகரிக்கின்றது.
முன்மொழியப்பட்ட புதிய யோசனை, ‘நியாயமான காரணங்கள்’ இருப்பதாக அவர்கள் நம்பினால், யாரையும் தடுக்க, கேள்வி கேட்க, தேட மற்றும் கைது செய்ய அல்லது எந்த ஆவணம் அல்லது பொருளையும் நீதிமன்ற உத்தரவில்லாமல் கைப்பற்ற பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகின்றது.
1976 ஆம் ஆண்டு முதல் இலங்கை மரணதண்டனைக்கு தடை விதித்தாலும், கொலை என்ற பயங்கரவாதக் குற்றத்துக்கு மரண தண்டனையை இந்த யோசனை அனுமதிக்கின்றது.
இந்த யோசனையின்படி, பொலிஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சந்தேகப்படும்படியான பெண்களை பெண் அதிகாரிகளால் தேட வேண்டும் என்பன உள்ளிட்ட சில புதிய முறையான பாதுகாப்புகள் உள்ளன.
கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவிப்பதற்கும், கைதி புரிந்துகொள்ளும் மொழியில் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதற்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை 14 நாட்களுக்கு ஒருமுறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்துவதற்கும் புதிய நடைமுறைகள் உள்ளன.
எவ்வாறாயினும், சட்டமூலத்தின் கீழ் முன்மொழியப்பட்ட சுயாதீனமான இரண்டு நிறுவனங்கள், சட்டத்தால் சுயாதீனமாக இருக்காது.” – என்றார்.