0
பிரிட்டிஷ் அடக்குமுறையை எதிர்த்த வட அயர்லாந்து :
உயிர்த்தெழுந்த ஈஸ்டர் எழுச்சியும்
புனித வெள்ளி பெல்பாஸ்ட் உடன்பாடும் !
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
புனித வெள்ளி ஒப்பந்தமான பெல்பாஸ்ட் உடன்பாடு (Belfast Agreement) ஏற்பட்டு 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த வருடத்தில், வட அயர்லாந்தின் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஏற்பட்ட கடுமையான சவால்களை அந்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டனர்.
“புனித வெள்ளி உடன்பாடு”
“புனித வெள்ளி உடன்பாடு” என பரவலாக அழைக்கப்படும் இவ்வுடன்பாடு பெல்பாஸ்ட் நகரில் ஏப்ரல் 10, 1998, புனித வெள்ளி தினத்தன்று ஐக்கிய இராச்சிய அரசுக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையில் வட அயர்லாந்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கை சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் வட அயர்லாந்தின் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஏற்பட்ட மிக முக்கியமான அரசியல் உடன்பாட்டாக அமைந்திருந்தது.
உயிர்த்தெழுந்த ஈஸ்டர் எழுச்சி :
அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் தொடர்ந்தும் வாழமுடியாது, தம்மை எதிர்த்து நிற்பது நம்மைவிட பலம்வாய்ந்த படைகள் என்றாலும் தமது தேசத்தின் சுதந்திரத்திற்காக தாம் போராடியே ஆகவேண்டும் என்ற முடிவு அயர்லாந்தின் புரட்சியாளர்களால் எடுக்கப்பட்டது. இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவை அமுல்படுத்துவதற்காக இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதி நிர்ணயிக்கப்படுகிறது.
அதன் நிமிர்த்தம் இந்த எழுச்சி Easter Rising (ஈஸ்டர் எழுச்சி) என பெயரிடப்பட்டு 24 ஏப்ரல் 1916 வெடித்தது.
பிரித்தானியப் படைகளின் காரணமற்ற கைதுகளும் தடுத்து வைப்புகளும் ஆத்திர அலையை அயர்லாந்து மக்களிடம் ஏற்படுத்தியது.ஈற்றில் மக்கள் மயப்படுத்தப்படாத போராட்டம், தலைமைத்துவங்களுக்கு இடையில் நிலவிய முரண்பாடுகள், திட்டமிடல், தொடர்பாடல், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளை வழங்கலில் காணப்பட்ட பலவீனங்கள் போன்றவற்றால் Easter Rising தோல்வியில் முடிந்தது.
ஐரிஷ் குடியரசுக் கட்சியின் துணை ராணுவ அமைப்பு நீண்ட தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, வடக்கு அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தடுத்து நிறுத்துவதற்கும், அயர்லாந்து முழுவதிலும் ஒரு சுயாதீன குடியரசை கொண்டுவருவதற்கும் பிற வழிமுறைகளில் போராடியது. ஐ.ஆர்.ஏ மற்றும் பிற ராணுவ குழுக்கள் பிரிட்டிஷ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே வன்முறை மோதல்களைக் கண்ட 30 ஆண்டு காலம் கொடூரமானதாகும்.
ஐ.ஆர்.ஏ -IRA ஆயுதப் போராட்டம் :
அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டத்தை நடாத்திய அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA) பின்னர் ஐக்கிய அயர்லாந்தையும் வலியுறுத்தி தனது தாக்குதல்களை முன்னெடுத்தது. அதேபோன்று, சின் பையின் என்ற அயர்லாந்தின் முதன்மையான அரசியல் அமைப்பு அரசியல் போராட்டத்தை சுமார் நூறு வருடங்களாக தொடர்ந்தும் மேற்கொண்டுவருகிறது.
ஆயினும் பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது.
வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர்ந்தும் அங்கம் வகிக்கவே வாக்களித்திருந்தனர்.
சிதையாத சித்தாந்தம்
பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்துக்குள் சிக்கிய அயர்லாந்துக்கே உரித்தான வட அயர்லாந்து, மீண்டும் அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாகும் என்ற போராட்டம் நீண்டது.
சின் பையினின் ஆயுத அமைப்பே ஐ.ஆர்.ஏ என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தாலும் சின் பையினின் அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டம் தடைகளை தகர்த்து முன்னகர்த்தது.
எண்ணூறு வருட போராட்ட வரலாறு :
ஆங்கில அதிகாரத்தை அயர்லாந்தில் நிலைநிறுத்த முயற்சித்த பிரித்தானியர்களுக்கும், தனித்துவத்தையும் தன்னாட்சியையும் நிலைநிறுத்த போராடிய அயர்லாந்து குடியரசுக்குமிடையிலான மோதுகை சுமார் எண்ணூறு வருட வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அயர்லாந்தை புரொட்டஸ்தாந்தை பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய இராச்சியத்துடன் 1801இல் இணைத்த போது தீவிர ஆயுத மோதல்களுக்கான அடித்தளமிடப்பட்டது.
அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சி :
1919 இல் வடக்கு அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சி ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி நிறுவப்பட்டது. அதன்பின் ஐரிஷ் குடியரசு இராணுவமான ஐ.ஆர்.ஏ, சுதந்திரத்துக்காகவும் மீண்டும் ஒன்றிணைந்த குடியரசாகவும் போராடியது. பெரும்பாலும் ஐரிஷ் தேசியவாத அரசியல் கட்சியான சின் ஃபைனுடன் இணைந்து போராடியது.
1969 ஆம் ஆண்டில், வடக்கு அயர்லாந்தில் இருந்து பிரிட்டிஷ் விலக வேண்டும் என்று கோரி ஐஆர்ஏ அமைப்பு வன்முறை போராட்டங்களை பயன்படுத்தினர். இதன் விளைவாக 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட 1,800 பேர் இறந்தனர்.
இரத்தக்களரி ஞாயிறு :
இரத்தக்களரி ஞாயிறு என அறியப்படும் ஜனவரி 30, 1972 அன்று , நிராயுதபாணியான பதின்மூன்று கத்தோலிக்க சிவில் உரிமை ஆர்ப்பாட்டக்காரர்கள் வடக்கு அயர்லாந்தில் டெர்ரியில் நடந்த ஒரு சிவில் உரிமைகள் அணிவகுப்பின் போது பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டும், 15 பேர் காயமுற்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் குண்டுவீச்சுக்காரர்கள் என்று பிரிட்டிஷ் இராணுவம் பொய்யாக பரப்புரை ஆற்றியது.
பாபி சாண்ட்ஸ் உண்ணாவிரதம்:
அயர்லாந்தின் நீண்ட கால ஆயுதப் போராட்டத்தில், பாபி சாண்ட்ஸ் போன்ற அகிம்சை வழிப் போராளிகளும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அவர் 66 நாள் உண்ணாவிரதம் இருந்து
1981 மே 5 அன்று இறந்தார். இதன்பின் பெல்ஃபாஸ்டில் பாரிய கலவரம் ஏற்பட்டு 100,000 பேர் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
வன்முறைகளால் தீவிரம் பெற்ற அயர்லாந்தில் மார்ச் 6, 1988 ஜிப்ரால்டரில் மூன்று நிராயுதபாணியான ஐஆர்ஏ உறுப்பினர்கள் பிரிட்டிஷ் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறுதிச் சடங்கு நாட்களில், இரண்டு பிரிட்டிஷ் வீரர்கள் தற்செயலாக ஊர்வலத்தில் சென்று தங்கள் வாகனத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, அடித்து சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர
அந்த காட்சியை உலகெங்கும் டிவி கேமராக்கள் பதிவு செய்தன.
இதன்பின் ஆகஸ்ட் 31, 1994 பல மாதங்கள் இரகசிய பேச்சுவார்த்தைகள், நீண்ட கால குண்டுவெடிப்பு – துப்பாக்கிச் சூடுகளுக்குப் பிறகு, ஐஆர்ஏ ஒரு வரலாற்று யுத்த நிறுத்தத்தை ‘இராணுவ நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதாக’ அறிவித்தது.
புனித வெள்ளி ஒப்பந்தம் :
அயர்லாந்தில் செப்டம்பர் 15, 1997இல் முதல் முறையாக, முறையான சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டன் சின் ஃபைனுடன் சம்மதித்தன. பின்னர் ஏப்ரல் 10, 1998 இல் பெல்ஃபாஸ்ட் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் புனித வெள்ளி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மே 23இல் ஐரிஷ் குடியரசின் வடக்கு அயர்லாந்தில் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. 2005
ஜூலை 28 இல் ஐஆர்ஏ தனது 36 ஆண்டுகால ஆயுத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக முறையாக அறிவித்தது.
புலம்பெயர் அயர்லாந்து மக்கள்:
சுதந்திரத்துக்கான போர் பல மில்லியன் அயர்லாந்து மக்களை உலகெங்கும் புலம்பெயர வைத்தது. அயர்லாந்து குடியரசில் வாழும் அயர்லாந்து மக்களின் எண்ணிக்கையோ சுமார் 4.6 மில்லியன்.
ஆனால், அயர்லாந்தை அடியாகக் கொண்ட சுமார் 70 மில்லியனுக்கு மேற்பட்ட அயர்லாந்து மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்த அயர்லாந்து மக்கள், உலகில் பலம் வாய்ந்த புலம்பெயர்ந்த சமூகக் கட்டமைப்புகளில் முக்கியமான தரப்பாகும். அவர்கள் தனித்து உணர்வுரீதியான செயற்பாடுகளுடன் மட்டும் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. மாறாக, ஐக்கிய அயர்லாந்தின் சுதந்திரம் தொடங்கி ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கம் வரை சொந்த நிகழ்ச்சி நிரலில் நேர்த்தியான நிர்வாக முகாமைத்துவத்தோடு தமக்குரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
தொடரும் அரசியல் போராட்டம்:
அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம், போர் நிறுத்த உடன்பாடுகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று நீடித்த போதும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தில் சின் பையின் தொடந்தும் உறுதியாக இன்னமும் இருந்து வருகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா