தாய்வானை சுற்றி இன்று காலையில் 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் அண்மையில் தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைப்பேவுக்கு வரும் வழியில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்.
இந்த பயணத்தின் போது தாய்வான் ஜனாதிபதியை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இருதரப்பையும் கடுமையாக எச்சரித்தது.
ஆனால் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்து பேசினார்.
இதனால், ஆத்திரமடைந்த சீனா, தாய்வானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியது. இதனையடுத்து, தாய்வானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதன்படி, இன்று காலை 6 மணியளவில், தாய்வானை சுற்றி 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் வட்டமிட்டன. இதனால், தாய்சானை சுற்றி இன்று 2ஆவது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது என்பது வெளிபட்டுள்ளது.
இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவை தாய்வான் ஜலசந்தியின் மைய பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றதாக தாய்வான் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து தாய்வான் வெளியிட்ட அறிவிப்பில், தாய்வான் எங்களது தாய்வீடு. நாங்கள் எங்கே போனாலும், என்னவெல்லாம் எதிர்கொண்டாலும், அதெல்லாம் ஒரு விடயமே இல்லை. எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டை பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.