‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து தன் திறமையை நிரூபித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைப்படங்கள்.. கமர்சியல் படங்கள்.. என வித்தியாசம் பார்க்காமல் தன் கடுமையான உழைப்பை அளித்து, இன்று ‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என்ற அடையாளத்துடன் வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்று வருவதால், இன்று தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகையாக வளர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘ரன் பேபி ரன்’, ‘சொப்பன சுந்தரி’ ஆகிய மூன்று படங்களும் தொடர் வெற்றியைப் பெற்று இவரை கதையின் நாயகியாக அடையாளப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் திரைத்துறை தொடர்பான விழாவில் பங்கு பற்றி பேசிய இவர், ” திரைத்துறையில் பெண்கள் தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வது என்பது எப்போதுமே கடினமானது. இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் வெளியானது குறைவு. ஆனால் தற்போது கதையின் நாயகிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகம். இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதால் தொடர்ந்து இந்நிலை நீடிக்கிறது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இயக்குநர்கள் வழக்கமான நாயகி வேடங்களுக்கு மட்டுமே கதாநாயகிகளை தெரிவு செய்தனர். ஆனால் தற்போது நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த சவாலான வேடங்களை ஏற்று நடிப்பதற்குரிய நடிகைகளை தெரிவு செய்கிறார்கள். இதனால் நடிகைகளும் தங்களின் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.
வெற்றிகரமான படங்களை தயாரிப்பதற்கான உத்திகள் என்று எதுவும் இல்லை. மேலும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையினதான உத்தியும், திட்டமும் கையாளப்படுகிறது. நடிகர்கள் படத்தின் திரைக்கதை எழுதும் காலகட்டத்தில் இருந்தே திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களிடம் படைப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களின் பொறுப்பும் கூட. அதே தருணத்தில் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என்பதை அவதானிப்பதில் தொடர்ந்து தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக எம்முடைய நடிப்பில் வெளியான ‘டிரைவர் ஜமுனா’ பட மாளிகைகளில் வணிகரீதியாக பாரிய வெற்றியை பெறும் என அவதானித்தேன். ஆனால் அந்தத் திரைப்படம் டிஜிட்டல் தளங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது.” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதைகளை தெரிவு செய்து திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதை போல், திரை துறையின் ஆரோக்கியமான போக்கு குறித்து தீவிரமாக சிந்திக்கும் எண்ணம் கொண்டவர் என்பதும் இதன் மூலம் உறுதியாக தெரிய வருவதால் திரையுலகினர் அவரை மனமுவந்து பாராட்டுகிறார்கள்.