சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் உள்ள இரண்டு வாயில்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிறயன் லாரா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விளையாட்ரங்கில் ஏற்கனவே 3 வாயில்களுக்கு டொனல்ட் ப்றட்மன், அலன் டேவிட்சன், ஆத்தர் மொறிஸ் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இப்போது மேலும் 2 வாயில்களுக்கு டெண்டுல்கர், லாரா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
டெண்டுல்கரின் 50ஆவது பிறந்த தினத்தையும் சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் லாரா குவித்த முதலாவது டெஸ்ட் சதத்தின் 30 ஆண்டு நிறைவையும் முன்னிட்டு ஏப்ரல் 24ஆம் திகதி அவர்களது பெயர்களில் சிட்னி கிரிக்கெட் அரங்க நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.
சிட்னி கிரிக்கெட் அரங்கில் லாரா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை 1993 ஜனவரி மாதம் பெற்றார். அப் போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 277 ஓட்டங்களைக் குவித்தார்.
புதிதாக பெயரிடப்பட்ட வாயில்கள் வழியாகவே விருந்தினர் அணிகளின் வீரர்கள் மைதானத்திற்குள் பிரவேசிப்பர் என கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதனமே தனக்கு மிகவும் பிடித்தமானது’ என டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘1991-1992 கிரிக்கெட் பருவகாலத்தில் நான் முதன்முதலாக அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்ததுமுதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய நிகழ்வுகள் சம்பவித்துள்ளன. எனது பெயரிலும் எனது நல்ல நண்பன் லாராவின் பெயரிலும் திறக்கப்பட்டுள்ள நுழைவாயிலை விருந்தினர் அணிகளின் வீரர்கள் பயன்படுத்தவுள்ளமை தங்களுக்கு கௌரவத்தை தருகிறது’ என டெண்டுல்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
‘சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எனக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையிட்டு பெருமை அடைகின்றேன். என்னைப் போன்றே சச்சினும் பெருமை அடைந்திருப்பார். இந்த மைதனாம் மறக்க முடியாத நிகழ்வுகளை எனக்கும் எனது குடும்பத்திற்கும் தந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போதெல்லாம் சிட்னிக்கு சென்று மகிழ்வுறுவேன்’ என பிறயன் லாரா தெரிவித்துள்ளார்.
சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் 5 டெஸ்ட்களில் 3 சதங்கள் உட்பட 785 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். 2004 ஜனவரியில் அவர் குவித்த ஆட்டம் இழக்காத 241 ஓட்டங்களே அந்த மைதானத்தில் அவர் பெற்ற அதிககூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கை ஆகும்.
லாரா 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 384 ஓட்டங்களைப் பெற்றார்.
டெண்டுல்கர், லாரா பெயர்களிலான நுழைவாயில்களை சிட்னி கிரிக்கெட் மைதானம் மற்றும் மைதானங்களுக்கான நியூ சவுத் வேல்ஸ் தலைவர் ரொட் மெக்ஜியோச், பிரதம நிறைவேற்று அதிகாரி கெரி மேத்தர், கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹொக்லி ஆகியோரினால் டெண்டுல்கர், லாரா பெயர்களிலான நுழைவாயில்கள் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.