காலத்தின் குறுக்குமுக வெட்டொன்றில் நுழைந்து அவள் காணமல் போனாள்
எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் ஆன
விபத்தாக அது நடந்து முடிந்தது .
இப்போதும் அவள் நடக்கிறாள்
இனியெப்போதும் என்னை
நினைக்கப்போவதில்லை
என்ற மனவுறுதியோடு
என் பருவ நிழல்கள் அவள்
காலடியில் கைகூப்பி நசிகிறது
பார்த்தும் பார்க்காத கண்கள்
என் பிரளயத்தை எதிர்பாத்திருக்காது
இறுதியாய் அவள் என் அருகிருந்த
நினைவுகள் ஊசலாடும் போது
உயிர்ப்பிறப்பின் வலி உருவாகிக்குடைந்து
என் உணர்வுகளில் சுமையானது
இப்போதும் அவள் நடக்கிறாள்
என் கனவுகளை தீக்குள் தூக்கி வீசியபடி
என்னை பார்த்துவிடக்கூடாதென்ற
நினைப்பை நிரந்தரமாக்கியபடி
என் விழிகளுக்கு அழ மட்டும்தான் தெரியும்
வலிகளென்றால் மனதிற்குதானே புரியும்
ஓய்ந்து புயலொன்று ஓரமாய் உறங்குது
கொடும்பாலையாய் வெடித்து வழிகிறது மனம்.
பிரியங்கன் பாக்கியரெத்தினம்