”இராவண கோட்டம் படப்பிடிப்பின் போது விரும்ப தகாத நிகழ்வுகளின் காரணமாகவும், சில மனிதர்களின் சுயநலம் காரணமாகவும் எமக்கு ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் அதிகரித்து, படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வாகனத்திற்குள் சென்று தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன்.” என அப்படத்தின் நாயகனும், நட்சத்திர வாரிசு நடிகருமான சாந்தனு பாக்யராஜ் தெரிவித்திருக்கிறார்.
திட்டக்குடி கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாராகி, மே 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
இந்த திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, இளவரசு, சஞ்சய், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது.
இதன் போது நாயகன் சாந்தனு பாக்கியராஜ் பேசுகையில், ”தயாரிப்பாளர் கண்ணன் ரவி எம்முடைய தந்தையாரை சந்தித்து, ‘சாந்தனுவிற்கு பொருத்தமான படைப்பை ஒன்றை தெரிவு செய்து, அவரை மீண்டும் முன்னணி நட்சத்திரமாக்குவேன்’ என்றார். இதற்காக நான்காண்டுகளுக்கு முன் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் விவரித்த கதையை கேட்டு சிறிய முதலீட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். ஆனால் திட்டமிட்டபடி நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டிற்குள் படத்தின் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. இது தொடர்பாக ஆராயும் போது சில மனிதர்களின் சுயநலம் காரணமாக நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். அதனை எம்மால் தாங்கிக் கொள்ள இயலாததால் படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் கூட வாகனத்தில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதிருக்கிறேன். அதன் பிறகு சில மாற்றங்களை மேற்கொண்டு, மீண்டும் கடினமாக உழைத்து திட்டமிட்டு இப்படத்தின் பணிகளை நிறைவு செய்திருக்கிறோம்.
ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் கடுமையான வெயில் காலகட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இருப்பினும் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உற்சாகமும், ஊக்கமும் அளித்து தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி, படத்தின் பணிகளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக பூர்த்தி செய்தோம். பல தடைகளைக் கடந்து இந்த திரைப்படம் மே 12 ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இந்நிகழ்வில் குணச்சித்திர நடிகையும் நகைச்சுவை நடிகையுமான தீபா சங்கர், ”தமிழகத்தின் கிராமப்புறங்களில் திருமணமான பெண்களை அவர்களது கணவர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வில் அனைவரும் பங்கு பற்ற வேண்டும்” என உணர்வுபூர்வமாக கேட்டுக்கொண்டார். இது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.