மறைத்து ஒளித்து
முன்னும் பின்னும் திகிலாய் பார்த்தபடி
கனத்த சுமையைத் தாங்கியது போல
நடக்கும் அந்த சிறுமியை
நீங்கள் பார்க்க வேண்டாம்
கண்களை மூடிக் கொள்ளுங்கள்
ஏன் என்று நினைக்காதீர்கள்
தனது ஆடை சிவப்பு நிறத்துளியின்
ஈரத்தில் தீப்பிடிப்பதாய்
கற்பிதம் செய்தபடி போகிறாள்
கண்களும் வாய்களும்
நாய்களாக மாறித்
தொடருமோ எனும் பயத்தில்.
பியானோ நின்று இருக்கிறது
சுற்றிலும் தூசுபடிந்த வெளி
அதன் வெண் நிறக் கட்டையிலிருந்து
இசைக் கார்வைகள் எழுகின்றன
கறுப்பு வண்ணக் கட்டையிலிருந்து
குழந்தையின் விசும்பல்கள்
சுவற்றின் மேல் தொங்கும்
ஒளிரும் புலி ஓவியத்திலிருந்து
உறுமல் ஒலி
இருள் அடர்த்தியாக.
வாடிக் குலைந்து
இதழ் இதழாக
உதிர்கிறது
அழகாய் இருந்த பூ
கடவுள் மனிதனின் சாயலாயிருந்தாராம்
மிருகமாய் மனிதன் வடிவெடுத்திருக்கிறான்
இயற்கை
அன்பின் உருவாயிருந்தது
சாத்தானுக்குப் கோரப்பற்கள்
முளைக்கும் வரை.
வசந்ததீபன்