செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தமிழீழக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சிங்கள – பௌத்தமயமாக்கல்”

“தமிழீழக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சிங்கள – பௌத்தமயமாக்கல்”

1 minutes read

“மீண்டும் ஒருமுறை தமிழீழக் கோரிக்கைக்கான முயற்சி முன்வைக்கப்படாமலிருக்க வடக்கின் மக்கள் தொகையில் 25 சதவீதம் சிங்களவர்களாக இருக்க வேண்டும் என அரச மற்றும் இராணுவ உயர்மட்டங்கள் முடிவெடுத்து அதற்காக சிங்கள – பௌத்தமயமாக்கலை நடைமுறைப்படுத்துகின்றன.”

– இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“வடக்கு – கிழக்கைக் குறிவைத்து புராதன சைவ ஆலயங்களை உடைத்தும், நீதிமன்ற உத்தரவுகளை மீறியும் தான்தோன்றித்தனமாகவும் தனிநபர்களின் காணிகளையும் கபளீகரம் செய்தும் அவற்றில் விகாரைகளைக் கட்டுவது மாத்திரமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பலநூறு ஏக்கர் காணிகளையும் சுவீகரித்து இராணுவ பாதுகாப்பையும் வழங்கி தொடர்ச்சியாக சிங்களக் குடியேற்றங்களையும் செய்து வருகின்றார்கள்.

போருக்குப் பின்னர் அம்பாந்தோட்டை உட்பட தூரப் பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள மக்களை வவுனியர், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குடியேற்றி வருகின்றார்கள்.

கிழக்கில் ஏற்கனவே மிகப் பெரியளவிலான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய சிங்களப் பிரதிநிதித்துவங்களும் உருவாக்கப்பட்டுவிட்டது. இப்போது வடக்கு மாகாணத்தில் அவை முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கையும் ஒரு கலவர பூமியாக மாற்றி தமிழ் மக்களை அங்கிருந்தும் விரட்டுவதே மாறிமாறி ஆட்சிக்கட்டிலில் ஏறும் இலங்கை அரசுகளின் நோக்கமாக இருக்கின்றது.

இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினூடாக வலியுறுத்தப்பட்டதுமான எமது தாயக பூமியான வடக்கு – கிழக்கிலிருந்தும் அரசின் நடவடிக்கையினூடாக நாம் விரட்டியடிக்கப்பட்டால் எங்கே செல்வது?

மேலாதிக்க சிந்தனைகளைக் கைவிட்டு சகல இனங்களும் இந்த மண்ணில் தமது சொந்தப் பிரதேசங்களில் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இந்த விடயங்களில் தனது தீவிர கவனத்தைச் செலுத்த வேண்டும்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More