தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விமலதாஸ் நிதர்ஷன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
முழுப் போட்டியிலும் அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டு வீரருக்கான சவால் கிண்ணத்தை காவத்தை மத்திய கல்லூரி வீரர் மலித் யசிறு வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் சம்மட்டியை 35.19 மீற்றர் தூரத்திற்கு எறிந்த நிதர்ஷன், அதே கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் 2019இல் நிலைநாட்டிய 32.85 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார்.
அப் போட்டியில் வவுனியா நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கே. சுபிஸ்கரன் (32.37 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
20 வயதுக்குபட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் 39.56 மீற்றர் தூரத்திற்கு சம்மட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதே நிகழ்ச்சியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் ரகுராஜா சஞ்சய் (31.91 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி வீரர் ஜெயமோகன் விஷ்னுபிரியன் (29.13 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் ஹாட்லி கல்லூரி வீரர் உமாஹரன் தருண் (31.60 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வீரர் ஸ்ரீதரன் ஐங்கரன் (27.45 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
அதிசிறந்த வீரர்
63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் சகல வயது பிரிவுகளுக்குமான அதிசிறந்த வீரருக்கான ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர் கிண்ணத்தை காவத்தை மத்திய கல்லூரி வீரர் கே. வி. மலித் யசுறு வென்றெடுத்தார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 15.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டியதன் மூலம் அதிகூடிய தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த வீரராக மலித் யசுறு தெரிவானார்.
இதனைவிட 16, 18, 20, 23 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அதிசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு சவால் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
இம் முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் மொத்தமாக 17 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
ஆண்கள் பிரிவில் 11 புதிய சாதனைகளும் பெண்கள் பிரிவில் 6 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.
ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வுநிலை) பாலித்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆனந்த குலசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்கினார்.