செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு

பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு

4 minutes read

இனியொரு பொற்காலம் –  பதிவு – 2

பரந்தனைக்கடந்து செல்லும் ஏ9 பிரதான வீதியிலிருந்து பிரிகிறது பூநகரி ஊடாக மன்னார் செல்லும் இன்னொரு பிரதான வீதி. அதன் முகப்பு பிரதேசம் அழகான பரந்த வயல்வெளியாகும். அதனை அண்டியதான குமரபுரம் எனும் அமைதியான எழில் கொஞ்சும் கிராமத்தில்தான் “பரந்தன் இந்து மகா வித்தியாலயம்”  அமைந்துள்ளது.

பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், குமரபுரம். உமையாள்புரம், ஆகிய கிராமங்களின் மாணவர்களும், ஏ9 பிரதான வீதியிலிருந்து பரந்தன் ஊடாகப் பிரிந்து செல்லும் முல்லைத்தீவு வீதியின் ஓராம்கட்டையடி, இரண்டாம் கட்டையடி பகுதிகளில் வசிக்கும் மாணவர்களும் பரந்தன் மகா வித்தியாலயத்தினை நோக்கியே தமது அறிவுப்பசியை ஆற்றிக் கொள்வதற்காக வருகை தருவது வழக்கம். பரந்தன் இரசாயனக்கூட்டுத் தாபனம், ஆனையிறவு உப்பு உற்பத்திக் கூட்டுத்தாபனம் என்பன  செயற்பட்டு வந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த நுாற்றுக்கணக்கான பணியாளர்களின் பிள்ளைகள் தமது கல்விக்காக பரந்தன் பாடசாலையை நாடி வருகை தருவதும் வழக்கமாக இருந்தது.

ffff

அந்தக்கால கட்டத்தில் பாடசாலையின் கட்டட வசதிகள் மிகவும் குறைவாக இருந்த போதிலும் ஓலையினால் நீண்ட மண்டபங்களை அமைத்து மாணவர்களின் கல்வி முயற்சிகளுக்கு பெரும்பங்காற்றிய அதிபர்கள் போற்றத்தக்கவர்கள். நான் கா. பொ. த சாதாரணம், உயர்தரம் கற்ற காலங்களில் மதிப்பிற்குரிய மகாலிங்கம் பத்மநாதன், புண்ணியசீலன் மகாலிங்கம் பத்மநாபன் ஆகியோர் எமது பாடசாலையின் முதல்வர்களாக இருந்தனர். அவர்களுடைய கண்டிப்புக் கலந்த நட்பான வழிநடத்தல் ஆசிரியர்களையும் மாணவர்களையும், பெற்றோர்களையும், பாடசாலை நலன்விரும்பிகளையும் கூட ஒரு கூட்டுக்குடும்பமாகவே இணைத்திருந்தது என்பதை மறுக்கவே முடியாது.

எமது மனதில் நீங்காதவராக நீண்ட காலம் உபஅதிபராக செயற்பட்டவர் மதிப்பிற்குரிய பசுபதி ஆசிரியர் ஆவார். திருமதி பசுபதி எமது மனைப்பொருளியல் ஆசிரியர். அவர் காலமாகிவிட்ட அறிவித்தலை ஒரு துண்டுப் பேப்பரில்தான் எங்கோ ஒரு காட்டு மூலையில் நின்றிருந்த காலத்தில் என்னால் அறிய முடிந்தது. அன்று ஒரு தாயை இழந்த பிள்ளையின் மனம் போல துடித்துக் கிடந்தேன். எமக்கு வாய்த்த ஆசிரியர்கள் அத்தனை பேரையும் இந்த நாட்களில் நினைவு கூர்ந்து அவர்களின் சேவைகளை பாராட்டிப் பணிகிறேன். கிராமத்துப் பிள்ளைகளான எமக்குள்ளே அவர்கள் கட்டியெழுப்பியதான உயர்ந்த வாழ்க்கையின் கனவுகள் உன்னதமானவை. எனது கடந்த கால வாழ்க்கையின் அனுபவங்களில் எத்தனையோ மனிதர்களை, சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கிறேன், அப்போதெல்லாம் எனது சின்னஞ் சிறிய கிராமத்துப் பள்ளியில் கற்றறிந்த எத்தனையோ விடயங்கள் என்னை சிறப்பாக வழிநடத்தியதை மறக்கவே முடியாது. மாணவர்களான எம்மை தமது சொந்த பிள்ளைகளாகவே வரித்துக் கொண்டு, அன்பையும் கண்டிப்பையும் கலந்து ஆற்றலுள்ளவர்களாக அவர்களை வனைந்தெடுக்கும் அற்புத சிற்பிகளாகவே ஆசிரியர்கள் தன்னலமற்றவர்களாக உழைத்தனர்.

bbb

எமது பாடசாலையில் அமைந்திருந்த பெரிய விளையாட்டு மைதானம் ஒரு கொடை என்றே கூறுவேன். கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிடையே பல வெற்றிக்கிண்ண வீர வீராங்கனைகள் பரந்தன் மகா வித்தியாலயத்தின் முத்துக்களாக இருந்தனர். 1985,அல்லது 1986 ஆக இருக்க வேண்டும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற உடற்பயிற்சி போட்டி நிகழ்வில் பதினெழு வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு அணி மாவட்ட மட்டத்தில் முதலிடம் வென்றது. அந்தக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அந்தப்போட்டிக்காக எமது உடற்கல்வி ஆசிரியர் நடராசா அவர்கள் நேர காலம் பாராது எம்மை பயிற்றுவித்திருந்தார். எனக்கு அந்த ஆண்டு சரியாக ஞாபகத்திலில்லை என்பது வருத்தமளிக்கிறது. உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்காக அயல் பாடசாலைகளுக்கு செல்வதும் வெற்றி ஆர்ப்பரிப்புகளுடன் வீதிகளில் நெடுகிலும் பாடித்திரிந்த நாட்களும் இனிமையான நினைவுகள்.

கலை இலக்கிய அம்சங்களிலும் எமது பாடசாலை பின்தங்கியதாக நானறியேன். எமது பாடசாலையின் சிறிய மேடை ஓய்வில்லாத பேரரங்கமாகவே எமக்குத் தென்பட்டது. எத்தனை பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், நடனங்கள், நாடகங்கள் அப்பப்பா அது ஒரு பொற்காலம். வட கிழக்கு மாகாணசபை பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற ஒரு பேச்சுப் போட்டிக்காக 1990ம் ஆண்டு எனது பாடசாலையிலிருந்து திருகோணமலை வரை நான் சென்று வந்த ஞாபகங்கள் என்றுமே இனிக்கும் தருணங்களாகும்.

பாசம் நிறைந்த தோழர்களையும் தோழிகளையும் நினைத்துப் பார்க்கிறேன். கனவிலே கூட கவலைகளைக் கண்டறியாத அந்த பிஞ்சு முகங்களை என் நினைவுகளிலே தேடுகிறேன். விரல்களை நீட்டி நீட்டி நாம் கோபம், நேசம் போட்டுக் கொண்டதும், பக்கத்து வீட்டு மாமரத்திற்கு கல்லெறிந்த தோழனைக் காப்பாற்றுவதற்காக வகுப்பிலிருந்த அனைவருமே குற்றவாளிகளாக அதிபரின் வாசலில் நின்றதும் என்றுமே அழியாத கோலங்கள்தான். ஒவ்வொரு வகுப்பறைகளுக்கு முன்பாகவும் நாங்கள் நாட்டிய பூ மரங்களும், நிழல் மரங்களும், இன்று அழிந்து போய்விட்டிருந்தாலும் அதன் நினைவுகள் என்றுமே எமது நெஞ்சங்களில் நிழலாகப் படர்ந்திருக்கின்றன.

போரியல் ரீதியாக மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த ஆனையிறவு மையத்தை அண்டியதாக எமது பாடசாலை அமைந்திருந்ததால் போரின் முழுமையான அழிவுகளையும் எமது பாடசாலை தாங்க வேண்டியிருந்தது. நாட்கணக்கான இடப்பெயர்வுகள் அல்ல, வருடக்கணக்கான இடப்பெயர்வுகளால் மாணவர்கள் சிதறடிக்கப்பட்டனர். பாடசாலையில் ஒரு கல் துாண்கூட இல்லாது துடைத்தழிக்கப்பட்டது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் உக்கிரமான போர்க்களத்தின் முன்னரங்கமாக எமது பாடசாலை அமைந்திருந்தது.  கருகிக்கிடக்கும் ஒரு நந்தவனத்தை கடந்து போகும் வலியோடு எனது பாடசாலையின் சிதைவுகளைக் கடந்து போன கொடுமையான நாட்களை மறக்கவே முடியாது.

cccc

மீண்டும் தொடங்கும் மிடுக்காக எமது பாடசாலையின் மீளெழுச்சி இன்று வைரவிழாவாக பரிணமிக்கிறது. கூடு கலைந்த குருவிகளாயிருப்பினும் பள்ளியின் மைந்தர்கள் ஒன்றிணைந்து செயற்படும் அழகும் வேகமும் இதயத்திற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது. வேர்களை விரித்து விழுதுகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் பெரு விருட்சமான எமது பாடசாலையின் வசந்தகாலம் மீண்டும் துளர்க்கத் தொடங்கிவிட்டது. ‘உன்னால் முடிந்தளவு ஒரு துரும்பையாவது துாக்கி நகர்த்தாமல் இருக்கிறாயோ’ என நித்தமும் எனது மனதும் கிடந்து அல்லாடுகிறது. எனது அம்மா மாமாவின் பாடசாலை, எனதும் என் சகோதர, சகோதரிகளினதும் பாடசாலை, இப்போது என் பெறாமகள் உயர்தரம் கற்கிறாள். மொத்தத்தில் இது எமது குடும்பத்தின் பாடசாலை. சமூகத்தின் அறிவாற்றலை பாடசாலை விருத்தி செய்கிறது. சமூகம் பாடசாலையை தாங்கி நிற்கிறது. இணைபிரியாத நுட்பமான உணர்விழைகளுடன் பின்னிப்பிணைந்த இந்த சமூக உறவுத்தளம் எத்தகைய பலமானது என்பதை வேகமாக முன்னெடுத்துச் செல்லப்படும் எமது பாடசாலையின் வளர்ச்சியைக் கொண்டே அறிய முடிகிறது. தற்போதைய அதிபர், ஆசிரியப் பெருந்தகைகள், மாணவச்செல்வங்கள், பழைய மாணவர்சங்கம், பரந்தன் இளைஞர்வட்டம், அனைவருக்கும் ஆதரவாக செயற்படும் புலம்பெயர் பழைய மாணவர்களையும் அன்போடு நினைவு கூரும் இனிமையான தருணமாக இது அமைகிறது. என் மனதில் கிளர்ந்தெழும் நினைவுகள் வார்த்தைகளுக்குள்ளே வசப்பட மறுக்கின்றன. அன்பும் நெகிழ்ச்சியுமாக பள்ளித் தோழமைக் கரங்களை மீண்டும் பற்றிக் கொள்கின்ற பரவசம் இதயத்தை இனிமையாக  நனைக்கிறது.

aaa

வைர விழாக்காணும் எமது பாடசாலையின் வரலாறு நீண்டு செல்ல வேண்டும். அதன் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு பல வளங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகச்சிறந்ததொரு கல்லுாரியாக தரமுயர்ந்து நுாற்றாண்டு காண வேண்டும். உலகெங்கும் சிதறிக்கிடந்தாலும் எமது பள்ளித்தாயின் மடியில் பெற்ற சுகத்தில் திளைத்துக் கிடக்கும் தோழமைகளே உங்களின் ஒற்றுமையும் உழைப்பும் கனவை  நிச்சயம் மெய்யாக்கும்.

jjj

இப்போது பள்ளி வளாகத்தில் சிறகடிக்கும் சிட்டுக்களே! உங்களின் கரங்களில்தான் எமது பள்ளியின் எதிர்கால வெற்றிகள் தங்கியுள்ளன. துயரம் தோய்ந்த பாடான காலங்கள் கடந்து போயின, இனியொரு பொற்காலம் உங்களால் மலரட்டும். மனமார வாழ்த்துகிறோம். இன்றைய அதிபர், ஆசிரியரின் அர்ப்பணிப்பான சேவைகளுக்காக நன்றியோடு அவர்தம் கரங்களைப் பற்றுகிறோம்.

வைர விழாக்காணும் பரந்தன் இந்து மகா வித்தியாலய அன்னையே வாழ்க! எம் அறிவாலயமே வாழ்க! இப் பாரினில் பேர் விளங்கும் வண்ணமாக வளர்க!

தமிழினி ஜெயக்குமரன்

பழைய மாணவி

அதுவொரு கனாக்காலம் – பதிவு – 1

http://www.vanakkamlondon.com/paranthan-hindu-mahavidyalayam-thamilini/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More