செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முள்ளிவாய்க்காலில் மூண்ட விடுதலைப் பெருங்கனல் | புலவர் சிவநாதன்

முள்ளிவாய்க்காலில் மூண்ட விடுதலைப் பெருங்கனல் | புலவர் சிவநாதன்

1 minutes read

 

மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலின்
ஆழ்ந்த துயரத்தை
அகத்திலும் முகத்திலும்
ஏந்தி நிற்கிறோம்!
எழுந்து நிற்கிறோம்!
ஆண்டுகள் தோறும்
அவலங்கள் இழப்புகள்
நேர்ந்த இன்னல்கள்
நினைவினில் ஏந்தித்
தாண்டவும் முடியாமற்
தாங்கவும் முடியாமற்
தாயக தாகத்தை
நீங்கவும் முடியமற்
ஆண்ட பூமியின்
ஆதி இறைமையை
அன்பு மொழிதந்த
மரபாற்றுப் பெருமையைச்
சூழ்ந்து பகைநின்று
சூறையாடிய
சூழ்ச்சிப் பின்னலை
முகங்கொண்டு
நிற்கிறோம்!

ஓய்வின்றி உலாவந்த
உலங்கு வானூர்திகள்
ஒழிவின்றிப் பொழிந்த
செல்லிலும் குண்டிலும்
ஆய்வுகள் கொடுத்த
அறிவியல் விளைவாம்
அசேதன வேதியல்
அழிவுக் குண்டிலும்
தீயிலும் பொசுங்கிக்
கருகியே மடிந்த
தாயரைச் சேயரைத்
தந்தையர் தனயரை…
ஆயிரமாயிரம்
உயர்களைப் பறித்த
அநீதி படிந்த
செயல்களின் உச்சியிற்..
போரினை வென்றதாய்க்
கூவிய சிங்களப் பேரினவாதப் பிசாசுகள் கூட்டத்தின்
ஓரின அழிப்பினை
உடன் நின்று நடத்திய
உலகிடம் இன்று
பதில் தேடி நிற்கிறோம்!
தீர்வுகள் தருமெனத்
தெருக்களில் நடக்கிறோம்!

காந்தியின் தேசமும்
கண்களை மூடிக்
காவிகள் தேசத்தைக்
காப்பாற்றி நின்றது!
பூந்தி லட்டோடும்
பூசைத் தட்டோடும்
சாந்தியடைந்து
சமாதானம் பேசிற்று!

தொடர்ந்து நடத்திய
இனக்கலவரங்களும்
தொழில் கல்வி வழியே
தொற்றிய சுரண்டலும்
நடந்த நான்காம்
தமிழ் மகாநாட்டிலே
நர்தனமாடிய நரபலியாட்டமும்
வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின்
வாழ்வினை முடித்த
வன்செயல் முறைமையும்
கடந்து வந்த கறுப்பு ஜூலையும்
காட்டுமிராண்டிகள் காவற்துறையினர்
கருணையே அற்ற
இராணுவச் சிப்பாய்கள்
உடந்தையாகியே
தொடர்ந்து நிகழ்த்திய
ஊறுகள் கொடுமையும்
உலகறிந்தவையே!

சமநீதியற்ற சனநாயகத்திற்
சட்டங்கள் செயற்படாச்
சர்வாதிகாரத்தில்…
அமைதியும் மகிழ்ச்சியும்
அடைவது எங்ஙனம்?
இனவாத மொன்றே
இதிகாச அறமெனில்
இனங்களின் உரிமைகள்
இணைவது எங்ஙனம்?
மதவாதம் மிக்கவர்
மனங்களின் அரசினில்
மானுட தர்மங்கள்
மலர்வது எங்ஙனம்?
அதனாற்றான் தமிழர்கள்
தமக்கான நீதியைத்
தாமே அடைந்திடத்
தவம் செய்து நிற்கிறார்!
இனபேத மில்லாத
இனிய தோர்தீவிலே
இணைந்து வாழவோர்
நிலமுண்டு என்கிறார்!
கனவோடும் நனவோடும்
காண்கின்ற தேசத்தைக்
கரமேந்தித் தொழுது
காப்பாற்றத் துடிக்கிறார்!
இதுதானே இன்றைய ஈழத்தமிழரின்
இறையாண்மைக்கான
இனமான வேதம்!
புதுவாழ்வு காண
அவர் பாடும் கீதம்!

முள்ளிவாய்க்காலிலும்
முற்றுப் பெறாது
மூர்க்கத்தனத்துடன்
முன்னேறும் இனவாதம்..
தள்ளிச் செல்கின்ற
தமிழரின் தீர்வுகள்..
தடையின்றித் தொடரும்
தமிழ்நிலப் பறிப்புகள்..
உள்ளவரை யிந்த
உலகத்தமிழரின்
உரத்த குரல்கள்
ஓய்ந்திட மாட்டா!
கொள்ளயடிப்பவரும்
கொலைகளை மறைப்பவரும்
கூண்டிலே நிற்கும்வரை
தேய்ந்திட மாட்டா!

துள்ளித் திரிந்தவரைப்
பள்ளிக்குப் போனவரைப்
பிள்ளகளைப் பெற்றோரைப்
பிணிவாய் பட்டவரை..
இல்லத்தரசிகளை..
இளையோரை.. இனியோரை..
நல்லமனிதர்களை..
நாம் வளர்த்த பிராணிகளை..
வெல்லத் துணிந்து
வீரப் படைகண்ட
வல்லமை மிக்க
வாலிபரை மங்கையரை..
கொள்ளியும் இன்றிப்
பாடையும் இன்றி
எள்ளும் தண்ணியும்
எதுவுமேயின்றி
வெள்ளத்திற் சேற்றில்
வெறுந்தரையிற்
புதைந்தோரை..
வெள்ளைக் கொடியோடு
வெளிவந்த வீரர்களை…
அள்ளியே சென்று
அவமானப்படுத்துகையில்
அழுது கதறியே
இன்னுயிரை நீத்தவரை..
எண்ணத்திருத்தியே
எழுந்துள்ளார் இளந்தமிழர்!

நல்லதீர்ப்பொன்றை
நாட்டுமக்கள் பெறும்வரையில்
நில்லாது இந்த
நீண்ட திருப்பயணம்!
வல்லவளே சக்தி!
வழங்குவாய் எம்மினத்தின்
உள்ளம் குளிர்
உரிமைகளை இறைமையினை!
முள்ளிவாய்க்காலே!

நீ..
முடிவல்ல!
விடிவே!

புலவர் சிவநாதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More