நிஜமெனும்
நிழல்கள் மோதி
நொருங்குண்ட நினைவுகளை
மீட்டிட விரும்பா வீணையாய்
ஓசையற்று அடங்குகிறது
வாழ்க்கைப்பயணம்
அகமன வலிகளை மறைக்க
முகம் போர்த்தி நிற்கும்
போலியான புன்னகைத் திரையொன்றை
முனைகள் மடிக்கப்பட்டிருந்தும்
மீண்டும் பிரதி செய்ய விரும்பாமல்
சேர்த்து அடுக்கப்பட்டிருக்கும்
வாழ்வின் சில பக்கங்கள்
இதமான இரவுகளை
நினைவின் வலிமை உடைத்தாளும்
தன் ஆதிக்க பலம் கொண்டு
வாரி அனைத்துக்கொள்ளும்
தலையணைத்தாயின் மேனி எங்கும்
விழி நீர் மழை நனைக்கும்
கோர்க்க முடியாமல்
உடைந்த முத்துக்களாய்
சில நினைவுகள் நீண்டு விரியும்
மனவேலிகளைத் தகர்த்து.
S. சுடர்நிலா