முள்ளிவாய்க்கால் பெருவலி காலம் வரை, எமது மொழியை, இனத்தை அழித்தவருக்கு, ஒதுக்கியவருக்கு, அவமதித்தவருக்கு, எதிரான போர்க்குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது என்பது நமக்குத் தெரிந்த வரலாற்று உண்மை.
இது ஒரு புறம் இருக்க, முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்குப் பின் இன்றைய காலகட்டத்தில், நமது தமிழ் மொழி எப்படி எமது தாய் நிலத்தில் திட்டமிட்டு ஒதுக்கப்படுகின்றது என்பதை நாம் உற்று நோக்க வேண்டிய தேவையில் உள்ளோம்.
எமது இனத்தின் மூச்சாக இருப்பது நமது தாய் மொழியாகும் .இதுவே நமது பண்பாட்டின், இனத்தின் அடையாளமும் ஆகும். இந்த மொழியின் அணிகலன்களாக கலை, கலாச்சாரம் போன்றவை விளங்குகின்றன. ஒரு மொழியை அழித்தால் போதும் அந்த இனம் அழிந்துவிடும் என்பது உலகியல் உண்மை. இன்று எமது மண்ணில் தாய் மொழி திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு எமது தமிழ்ச் சமூகமும் இசைந்து செல்வதாகவே புலப்படுகின்றது.
இலங்கையில் சில காலங்களாக சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழிப் பாடத்தில் ஆகக் குறைந்தது சாதாரண சித்தி அடைந்தால் போதும் உயர்தரக் கல்வி பயில முடியும் என்ற விதிமுறை இருக்கின்றது. அதற்கேற்ப பெரும்பாலான மாணவர்களும் தமிழ் மொழிப் பாடத்தில் சாதாரண சித்தி அடைவதற்காகவே தமிழ் மொழியைப் படிக்கின்றனர். அனைத்து வடக்கு கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும் உள்ள மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழிப் பெறுபேறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. தமிழ்ப் பாடத்தில் அதி உயர் சித்தி பெறுபேறு எடுப்பவர்களின் வீதம் குறைவாக இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
உயர்தரத்தில் தமிழ் மொழி படிக்காமலே பல்கலைக்கழகக் கலைத் துறையில் கல்வியைத் தொடரலாம் என்ற நிலை, இலங்கையில் இருப்பதால் உயர்தரத்தில் தமிழைத் தவிர்த்து வேறு பாடங்களைப் படித்துப் பல்கலைக்கழக கலைப்பீடத் துறையில் மாணவர்கள் நுழைகின்றார்கள்.
உயர்தரத்தில் தமிழைப் படித்துக், கொட்டிக் கிடக்கும் வளத்தை, இலக்கியத்தைச், சுவைத்தால் தானே தமிழ் மொழி, இலக்கியம் போன்றவற்றில் மேற்படிப்பை மேற்கொள்ள மாணவர்களுக்கு விருப்பம் வரும். அந்த சந்தர்ப்பம் கிடைக்காமலேயே தமிழைத் தவிர்த்து வேறு துறையில் படிக்கின்றனர்.
எமது கிராமப் புறங்களைப் பார்க்கும்போது, உயர் தரத்தில் நல்ல தமிழ்ப் புலமை இருக்கும் மாணவர்கள் கூட தமிழ் மொழிப் பாடத்தை தவிர்த்து உதாரணமாக பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் போன்றவற்றைத் தேர்வு செய்கின்றனர்.
அண்மைக் காலங்களில் வந்த தொழில்நுட்பக் கல்வியை விரும்பி எடுத்துப் படிக்கின்றனர். எமது முகவரியாக மூச்சாக இருக்கும் தாய் மொழியைத் தவிர்த்துப் புவியியல், உளவியல், அரசறிவியல், போன்றவற்றை விரும்பி எடுத்து பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்கின்றனர். ஏனைய துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாணவர்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இப்போது வேதனைக்குரிய விடையம் என்னவெனில், தமிழ் மொழிப் பாடத்திற்கு எமது தாய் நிலத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகின்றது. சிறந்த தமிழ் ஆசிரியர்கள் இலங்கையில் இருந்தால் மட்டுமே தேன் சுவை கொண்ட தமிழ் மொழியையும் அதன் இலக்கியங்களையும் பெருமையையும் அதே சுவையோடு மாணவர்களுக்கு கொடுக்க முடியும். அப்படி இருந்தால் மட்டுமே எதிர்காலங்களில் நிறைய தமிழ்ப் புலமையுள்ள ஆசிரியர்கள் வெளிவருவார்கள்.
இந்த வேளையில், இந்தியாவிலிருந்து பயிற்சிப் பட்டறை வழங்க வருகை தந்த ஒரு பேராசிரியை கூறிய கருத்து ஞாபகத்திற்கு வருகின்றது. “இலங்கையில் உள்ள ஆசிரியர்கள் வலு குறைந்தவர்களாக இருக்கின்றார்கள்.” என்பது அவரது கருத்து. “இப்படி வலு குறைந்த ஆசிரியர்கள் எப்படி பாடம் புகட்ட முடியும்?” என்ற கேள்வியையும் அவர் முன் வைக்கின்றார்.
இந்தத் தவறான புரிதல்களை இல்லாதொழிப்பது, இலங்கையில் உள்ள ஆசிரியர்கள் கைகளிலேயே உள்ளது. எமது மொழியை மாணவர்களுக்கு அனுபவித்து கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தாய் மொழியை, எம் பண்பாட்டை, எம் மண்ணைக் காதலிப்பார்கள்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர், தமிழை விரும்பிப் படித்தவர்களுக்கு “தமிழ்ப் பண்டிதர்” வகுப்புகள் நடத்தப்பட்டன. அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்து போய் விட்டன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் இப்போதுள்ள தமிழ்ச் சங்கங்கள் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும்.
சிங்கள மொழியும், தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் இருக்கின்றது. இப்படி இருக்கத், தமிழில் நிறைய அச்சுப் பிழைகளைத், தனிச் சிங்கள மொழியில் சுற்றறிக்கைகள் போன்றவற்றை நாம் பொது வெளியில் காண்கின்றோம்.
தமிழ் அரசியல்வாதிகள் நமது தாய் மொழிக்கு எதிரான அனைத்து ஒடுக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும். அவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். கல்வி முறையில் குறிப்பாக தமிழ் மொழிப் பாடத்தில் மாற்றங்கள் வர வழி செய்ய வேண்டும். இது அவர்களது வரலாற்று கடமையாக இருக்கின்றது.
புலம் பெயர் மண்ணில், தாய் மண் வளர்ச்சிக்காக எத்தனையோ தொண்டர் அமைப்புகளை நிறுவியிருக்கும் நாம், இலங்கை மண்ணில் எமது தாய்மொழி ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு எமது தாய் மொழியில் பற்று வரச் செய்தல் வேண்டும். பாடசாலை மட்டத்தில் இதற்காக விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். தமிழின் பெருமையைப் பலவழிகளில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். தமிழ் மொழி படிப்பது அவமானம், வேலை பெறுவது கடினம் என்ற அவர்களது மனோ நிலையை மாற்ற வேண்டும்.
புலம் பெயர் மண்ணில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளுக்காக குரல் கொடுக்கும் நாம் கட்டாயம் தாய் மண்ணில் எமது மொழியை நிலை நிறுத்தப் பாடுபடவேண்டும். இது அவசரமானது அவசியமானதுமான வரலாற்றுக் கடமையாக இப்போது எம் முன் இருக்கின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்