“தொடர்ச்சியான இயக்கத்தின் மூலம் உணர்வைப் பற்றிக் கொள்ளுதல் என்பது அரங்கச் செயற்பாட்டின் அடிப்படைத் தொழிற்பாடாகிறது.”
அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்ச்சியூட்டும் அரங்கச் செயற்பாடாக சுயாதீன அரங்கச் செயலாளிகளின் கூட்டுப்படைப்பாக்கமாக கழுமரம் தெருவெளி அரங்க ஆற்றுகை நிகழ்வு நடைபெற்று வருகிறது.
பாடசாலைகள் மற்றும் மக்கள் கூடும் கிராமத்து பொது வெளிகளில் கழுமரம் அரங்க ஆற்றுகை மக்களையும் பங்கு கொள்ளத் தூண்டுவதனூடாக அவர்களை செயலூக்கம் கொள்ளும் வகையில் விவாத அரங்காக நிகழ்த்தப்பட்டு வந்தது. இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
இதன் நீட்சியாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக பரந்த பார்வையார்களை இதன் செய்தி சென்றடையும் இலக்குடன் காணொளிவடிவிலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
வரும் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) மு.ப 10.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் கழுமரம் காணொளி வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளதுடன், இந்நிகழ்வினை,
இவ் அரங்கச் செயற்பாட்டு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளரும், வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளருமான திரு.அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் அவர்கள் தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கழுமரம் காணொளி திரையிடப்பட்டு சபையோர் கருத்துப் பகிர்வு இடம்பெறும்.
தொடர்ந்து ஆற்றுகையில் பங்குகொண்ட கலைஞர் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெறுவதோடு கழுமரம் ஆற்றுகை இறுவட்டும் வழங்கப்படவிருக்கிறது.