செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “குருந்தூர்மலைக்கு கம்மன்பில வருவதால் தமிழர் அஞ்சி அடங்கார்!”

“குருந்தூர்மலைக்கு கம்மன்பில வருவதால் தமிழர் அஞ்சி அடங்கார்!”

3 minutes read

“முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர்மலைக்குச் சிங்கள கடும்போக்குவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதால் தமிழ் மக்கள் அஞ்சி ஒடுங்கமாட்டார்கள். அவர் இங்கு வருவது சிங்கள இனவாதத்தைக் கிளப்புவதற்கே. தெற்கில் சரிந்துபோயுள்ள வாக்கு வங்கியை அதிகரிக்கவே அவர் இங்கு வருகின்றார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர் நாளைமறுதினம் புதன்கிழமை குருந்தூர்மலைக்கு வருகை தரவுள்ளனர். குருந்தூர் விகாரைக்கு அதிகளவான காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரும் பதவி விலகியிருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே கம்மன்பில குருந்தூர்மலைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அவரது வருகை தொடர்பில் கேட்டபோது கட்சித் தலைவர்கள் தெரிவித்தமை வருமாறு,

செல்வராசா கஜேந்திரன்
(தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

“2021 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படவுள்ளமையை அறிந்து நாம் போராட்டம் நடத்தினோம். கட்டுமானப் பணிகள் நடைபெறாத, வரலாற்றை ஆய்வு செய்யும் பணி மாத்திரமே நடக்கும் என்று கூறினார்கள். கொரோனாக் கட்டுப்பாட்டுக்காலத்தில் இராணுவத்தின் உதவியுடன் இரகசியமாக பிரமாண்டமான தாதுகோபுரம் அமைத்தார்கள். ஆதிசிவன் வழிபாடு இடம்பெற்றுவந்த அந்த இடத்திலே அகழ்வுப் பணி என்று அங்கிருந்து அனைத்து விக்கிரகங்களையும் அகற்றி தாதுகோபுரத்தை அமைத்திருக்கின்றார்கள். இது சட்டவிரோதமான கட்டடம்.

இங்கு முரண்பாடு ஏற்பட்டு நீதிமன்றத்துக்குச் சென்று கட்டுமானங்கள் அமைக்க வேண்டாம் என்ற கட்டளையும் இருக்கின்றது. இதற்கிடையில் தொல்பொருள் திணைக்களம் 300 ஏக்கர் காணிகளை தங்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சுவீகரித்திருக்கின்றது. எங்கள் போராட்டங்களால் அதைவிடுவிக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைப்பதாக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி வவுனியாவில் வைத்து உத்தரவிட்டிருந்தார் ஜனாதிபதி ரணில். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இப்போது தொல்பொருள் திணைக்களத் தலைவரை குறைகாண்பதுபோல் சில விடயங்களை ரணில் பேசியிருக்கின்றார்.

சிங்களத் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதும் மக்களிடம் காணிகளை மீள ஒப்படைக்கப்போவதில்லை என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் என்று மக்கள் முன்பாக செல்ல முடியாத அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்தை மீண்டும் உசுப்பேத்துவதன் ஊடாக தங்கள் வாக்குகளை நிரப்ப முயல்கின்றார்கள். அதன் வெளிப்பாடே கம்மன்பிலவின் வருகை. அவர் எங்கும் செல்லலாம்.

அவர் அங்கு செல்கின்றார் என்பதற்காக தமிழர்கள் எல்லாம் அடங்கியொடுங்கி அஞ்சி இருக்கமாட்டார்கள். தமிழர்களுடைய பூர்வீக நிலத்தில் சட்டபூர்வமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருக்கின்ற, தாதுகோபத்துக்கு நாங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டாமல் இருக்கப்போவதில்லை.

அவர் பார்வையிட்டு அந்த விகாரை அமைப்பு சட்டவிரோதமானது என உணர்வாராக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும். இல்லை வெறிகொண்டு தமிழர்களினுடைய பூர்விக நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு கட்டப்பட்ட தாதுகோபுரத்தை தங்களுடைய வரலாற்று பரம்பரியம் என்று பொய்களைச் சொல்லப் போனால் அது இனங்களுக்கு இடையே இடைவெளிகளைதான் உருவாக்கும்.” – என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன்
(ரெலோ)

“தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாட்டின் ஓர் அங்கம் இது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளைப் பெருக்குவதற்கு இதனைத் துருப்புச் சீட்டாக எடுத்துள்ளார்கள். இவர்கள் வந்து வந்து சென்று இதனை பெரிதுபடுத்துவதற்கு நாங்களும் சும்மா இருக்கமுடியாது. ஏதாவது எதிர் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இவர்களுடைய வருகை குருந்தூர்மலையைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கள்ள நோக்கம்தான்.” – என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்
(ஈ.பி.ஆர்.எல்.எப்.)

“உதய கம்மன்பில இனவாதி. இலங்கை சிங்களவருக்குரிய நாடு என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர்களுள் ஒருவர். தேர்தல்கள் இடம்பெற இருப்பதனால் சிங்கள மக்களுக்கு படம் காட்டி பௌத்தத்தை பேணிப்பாதுகாப்பது போல சோடிப்பதற்காக அவர் வருகை தரலாம். முதலில் சரத் வீரசேகரவும் வந்து சென்றவர். அதேபோல் இவரும் இங்கே வந்து சென்று சிங்கள ஊடகங்களுக்கு ஏதும் சொல்லுவார். இனவாதத்தை கக்கி தமது வாக்கு வங்கிகளைப் பெருக்குவதற்கே இவர்கள் வருகை தருகின்றார்கள்.” – என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

துரைராசா ரவிகரன்
(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி)

“உதய கம்மன்பில போன்ற குழுவினர் இங்கே வந்து இனவாதத்தைக் கக்கிவிட்டு செல்வதை எங்களுடைய தமிழ்ச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது எம்மினம் மீதான இன்னொரு இன அழிப்பாகவே நாம் பார்க்க வேண்டும்.

தமிழ் பௌத்தம், சிங்கள பௌத்தம் என பிரித்துப் பார்ப்பதற்கு முன்னரே எங்களுடைய சைவ சமயம் இங்கு இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

தமிழ் பௌத்தம் என்று கூறி பௌத்த மதத்தை எங்களுடைய தமிழ் மக்கள் மீது திணித்து நீதிமன்றக் கட்டளைகளையும் மீறி பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டவிரோத விகாரையை ஆதரிக்கவே கம்மன்பில வருகின்றார். நாங்கள் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன்
(புளொட்)

“குருந்தூர்மலை தொடர்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ள வரலாறு உண்மைக்குப் புறம்பானது என அங்கே வருகை தர இருக்கின்ற உதய கம்மன்பிலவுக்கும் தெரியும். சிங்கள மக்கள் மத்தியிலே இன ரீதியான அல்லது மத ரீதியான பிளவுகளைக் கூர்மைப்படுத்தி அதன் மூலம் தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடுகின்ற செயற்பாடாகத் தான் நாம் இதனைப் பார்க்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் சிங்கள – தமிழ் மக்களிடையே விரிசலை இன்னும் இன்னும் ஏற்படுத்துமே தவிர முரண்பாடுகளைக் குறைக்காது.

இந்தச் செயற்பாடுகளைச் செய்கின்ற உதய கம்மன்பில போன்றவர்களைக் கண்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.

இவ்வாறு செயற்படுவது நாட்டை இன்னும் அகலபாதாளத்துக்குள் தள்ளுமே தவிர எந்தவித அபிவிருத்தியையும் ஏற்படுத்தாது.” – என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. தெரிவித்தார்.

எஸ்.வினோநோதராதலிங்கம்
(ரெலோ)

“இனவாதக் கட்சியினுடைய தலைவராகக் காணப்படுகின்ற அதே தருணம் விகாரைகளுக்கு அருகாமையில் சிங்களவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்ட அரசியல்வாதி உதய கம்மன்பில. குருந்தூர்மலையைச் சூழ சிங்களவர்களை மாத்திரமே குடியேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். அவரின் வருகை குருதிக்களரியை ஏற்படுத்தும் விடயம்.

எரிகின்ற விளக்கில் எண்ணெய்யை ஊற்றுவது போல் பிரச்சினைக்குரிய விடயமாக மாறி இருக்கின்ற குருந்தூர்மலைக்கு உதய கம்மன்பில வருவதானது சிங்கள மக்களை உசுப்பேத்தி அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கே.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் குருந்தூர்மலைக்குச் செல்லும்போது பொலிஸார் பல தடைகளை விதிக்கின்றனர். ஆனால், தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் விசேட அனுமதி வழங்கப்படுகின்றது. அவருடைய வருகையை ஏற்க முடியாது.” – என்று ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோதராதலிங்கம் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More