“ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன மறுக்க மாட்டார் என நான் நினைக்கின்றேன்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ராஜபக்சக்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்த நாமல் எம்.பி.,
“ராஜபக்சக்கள் எவரும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று என்ன துணிவுடன் வஜிர கூறினார் என்று எனக்குத் தெரியாது. மக்கள் ஆணை இன்னமும் ராஜபக்சக்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் உண்டு. இதை வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட எவரும் நம்பவில்லையாயின் தேசிய ரீதியில் தேர்தல் ஒன்றை விரைந்து நடத்திக் காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அந்தத் தேர்தலில் மக்கள் ஆணை எவருக்கு – எந்தக் கட்சிக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.” – என்றார்.