செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸில் வன்முறை உச்சம்! – இளைஞரின் சடலம் இன்று அடக்கம்

பிரான்ஸில் வன்முறை உச்சம்! – இளைஞரின் சடலம் இன்று அடக்கம்

1 minutes read

பிரான்ஸில் 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர் பிரான்ஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நகரப் பகுதிகளில் வன்முறைகள் உச்சம் பெற்றுள்ளன. அதை ஒடுக்குவதற்காகக் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவின் கவச வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சரின் கோரிக்கையை அடுத்தே பிரதமர் கவச வாகனங்களைக் களமிறக்கும் அனுமதியை வழங்கியுள்ளார். இறுதியாக மஞ்சள் மேலங்கிப் போராட்டங்களின் போது இந்த வகைக் கலகத் தடுப்பு வாகனங்களை ஜொந்தாம் படையினர் பயன்படுத்தி இருந்தனர்.

அதேசமயம் இன்னிசை நிகழ்ச்சிகள் உட்படப் பெரிய அளவில் மக்கள் திரளும் வைபவங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பெரும் எடுப்பில் மக்கள் கூடுவது தற்போதைய நிலைமையில் சட்டம் – ஒழுங்கைப் பேணுவதற்கு ஆபத்தாகி விடலாம் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

கலவரங்களை அடுத்து நாடெங்கும் கோடைகால விழாக்கள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் ஸ்ரட்- து- பிரான்ஸ் விளையாட்டு அரங்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமையும் இன்று சனிக்கிழமையும் நடைபெறவிருந்த கனடாவில் பிறந்த பிரெஞ்சுப் பாடகி மைலீன் பார்மரின் பெரும் இன்னிசைக் கச்சேரி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நகரப் புற வன்செயல்கள் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாளாகத் தீவிரமடைந்து வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உட்படப் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கடைகள், பெரும் வர்த்தக மையங்கள் தாக்கி உடைக்கப்பட்டுப் பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன. பாரிஸின் புறப் நகரங்களில் தமிழர்களால் நடத்தப்படுகின்ற வர்த்தக நிறுவனங்கள் உட்படப் பல கடைகள் தீக்கிரையாகியுள்ளன.

நாடு முழுவதும் பஸ் மற்றும் ட்ராம் சேவைகளை இரவு ஒன்பது மணியுடன் நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் சகல பொலிஸ் நிலையங்களையும் பணித்துள்ளார்

நாட்டின் பல பகுதிகளில் பல்பொருள் வர்த்தக மையங்கள் சில மூடப்பட்டிருக்கின்றன. பாரிஸ் புறநகராகிய ரொணி – 2 பகுதியில் அமைந்துள்ள வர்த்தக மையம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கானது. மூடப்பட்டிருந்த வர்த்தக மையமயத்தின் இரும்புக் கதவை உடைத்துத் திறந்து உள்நுழைந்த சிலர் அங்குள்ள மக்டொனால்ஸ் உணவகத்தின் இருக்கைளை அடித்து நொறுக்கி நாசமாக்கினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரொணி ரயில் நிலையத்திலும் இருக்கைகள் சேதமாக்கப்பட்டன.

சில அசம்பாவித சம்பவங்களை அடுத்துப் பாரிஸின் புறநகரில் உள்ள கிறித்தை சொலேய் வர்த்தக மையம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சுடப்பட்டு இறந்த 17 வயதான நாஹெலின் உடல் அடக்கம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்று நொந்தேர் நகர மேயர் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More