இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொடைப் போராளி !
ஆங்கிலேயரை வெடிகுண்டால் தகர்த்த மாவீரன் சுந்தரலிங்கம் !!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(மாவீர தியாகங்களால் உயிர்பெற்றதே ஈழமண். இந்த ஈகத்தில் உச்சம் தொட்ட தியாகமே உயிர்க்கொடை. தன் மண்ணிற்காக, மக்களுக்காக உயிர்க்கொடை தந்த உறுதிப் பூக்களை ஒவ்வோர் ஆண்டும் தமிழர் தாயகத்திலும், புலம் பெயர் மண்ணிலும் ஜூலை ஐந்தில் நினைவு கூறப்படுகின்றனர். இதனையிட்டு இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது)
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது அடக்கப்பட்ட இனத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என உலகம் வரையறை செய்கிறது.
வெற்றி அல்லது வீர மரணம் என்பது தான் இந்த வீரனின் குறிக்கோளாக இருந்தது. வீரன் சுந்தரலிங்கத்தை வீழ்த்திவிட்டால் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி நம் கையில் என்று ஆங்கிலேயர் கும்மாளமிட்டனர். ஆனால் கோட்டைக் கதவுகளை திறந்து ஆங்கிலேயரையும் கூலிப்படையினரையும் வெட்டி வீழ்த்தினார் வீரன் சுந்தரலிங்கம் .
வெள்ளையர்களை வெறும் வாளுடன் சமாளிப்பது எப்படி என யோசித்த வீரன் சுந்தரலிங்கம் பீரங்கிக் குண்டுகளுக்குப் பயன்படுத்தும் வெடிமருந்தக்கிடங்கை அழித்துவிட்டால் ஆங்கிலேயரின் கொட்டத்தை அடக்கிவிடலாம் எனக் கணித்தார்.
இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொலைப் படை தாக்குதல்
தனது வீரத்தாலும் மதி நுட்பத்தாலும் சீக்கிரமே கட்டபொம்மனின் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார் சுந்தரலிங்கம்.
சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன.
கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.
கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார்.
அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார். இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது.
பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.
1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.
சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.
பாங்சாலங்குறிச்சி கோட்டையை தன் உயிர் இருக்கும் வரை அன்னியன் கையில் விடமாட்டேன். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என் உடல் பொருள் ஆவியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்று முழக்கமிட்டபடி மாவீரன் வீரமரணம் அடைந்தான்.
இளமையில் வீரன் சுந்தரலிங்கம் :
வீரன் சுந்தரலிங்கம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகில் கவர்னகிரி என்னும் கிராமத்தி சித்திரை பௌர்ணமி அன்று 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தார்.
இளமையில் வீர விளையாட்டக்களைக் கற்ற குறும்பும், அறிவு நுட்பமும் துணிச்சலும் சுந்தரலிங்கத்திடம் இருந்தன. கவர்னகிரியில் கிடைக்கு மந்தை போடும் இடங்களில் ஒரு கும்பல் ஆடுகளை திருடிக்கொண்டே இருந்தது.
இதைக் கேட்ட சுந்தரலிங்கம் வெகுண்டெழுந்து, தானே ஆடு திருட்டு தடுப்புப் படைக்கு தலைமையேற்கிறேன் என்று சபதமேற்று ஆட்டுத் திருட்டை ஒழித்தார். இதனால் ஆடுகள் திருட்டை ஒழித்த வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் கவர்னகிரியையும் தாண்டி பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது.
அக்காலத்தில் பெரும் வீரர்களாக விளங்கிய பெரிய காலாடி, சின்னக் காலாடி மாடக் குடும்பனார், மொட்டை சங்கரன் காலாடி போன்றவர்களிடம் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், கவரினகிரி தற்காப்புப் படைப்பள்ளிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்டபொம்மன் வளர்த்த வீரன்:
சுந்தரலிங்கத்தின் வீரத்தைத் தனது அமைச்சர் தானாவதிப் பிள்ளையின் மூலம் கேள்விப்பட்ட கட்டபொம்மன் அவரைச் சந்தித்தே தீர வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். அதோடு அவரை எல்லைப் பகுதியை கண்காணிக்கப் படையில் சேர்த்துக் கொள்ள விரும்பினார்.
வீரன் சுந்தரலிங்கத்தின் கீரத்தையும் நேர்மையையும் பரிசோதிக்க வெள்ளையத் தேவனும் கட்டப்பொம்மனும் மாறுவேடத்தில் சென்றனர். இவர்களின் செயல் திட்டத்தின்படி அமைச்சர் தானாவதிப்பிளிளை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஓட்டப்பிடாரத்திலுள்ள பாஞ்சை கிராமத்தில் தன்னுடைய நண்பர் வீட்டில் சுந்தரலிங்கத்தை தங்க வைத்திருந்தார்.
அப்போது வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்த்திருக்கும்படி வீரன் சுந்தரலிங்கத்திடம் கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இந்த நேரத்தில் கட்டப்பொம்மனும் வெள்ளையத்தேவனும் நாங்கள் தான் வீட்டின் உரிமையாளர்கள் என்று அறிமுகம் செய்து அதே வீட்டிற்குள் நுழைந்தனர். சிறுது நேரத்தில் வீட்டிலிருக்கும் நகைகளைத் திருடிக்கொண்டு வெளியேற அவர்களைக் கையும் களவுமாகச் சுந்தரலிங்கம் பிடித்தார்.
நீங்கள் இந்த கீட்டின் உரிமையாளர் இல்லை என்பது எனக்குத் தெரியும் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று தான் கவனத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் நினைத்தபடியே நீங்கள் திருடர்கள் தான் என்று சொல்லி வாளை உருவினார் வீரன் சுந்தரலிங்கம்.
அதற்கு அவர்கள் நாம் மூவர் மட்டுமே இங்கே இருக்கிறோம். நகைகளைச் சரிபாகமாக பங்கிட்டு கொள்ளலாம் என ஆசை காட்டினார்கள். இதைச் சம்மதிக்காத வீரன் சுந்தரலிங்கம் உயிர்மீது உங்களுக்கு ஆசை இல்லையா என்று வாளை எடுக்க மாறுவேடத்தை வீரபாண்டிய கட்டபொம்மனும் வெள்ளையத்தேவனும் கலைத்தனர்.
வெகுண்டெழுந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் :
தனது சோதனையில் வெற்றிப் பெற்ற வீரன் சுந்தரலிங்கத்தைப் பாஞ்சாலங்குறிச்சி அரசபையின் ஒற்றர் படைத் தளபதியாக அறிவிக்கிறேன் என்று கட்டபொம்மன் கூறினார்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் கட்டப்பொம்மனிடம் சமாதானம் பேச அழைத்தார். அப்போது ஜாக்சன் வரி விஷயத்தைக் கிளர வெகுண்டெழுந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கு ஏன் தரவேண்டும் கிஸ்தி, வரி என்று வீரமுழக்கமிட்டார்.
மோதல் ஏற்படவே ஜாக்சன் துரை கட்டப்பொம்மனையும் அவனது ஆட்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். வெள்ளையர்கள் சதித்திட்த்தை அறிந்து ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் வந்து வெள்ளை சிப்பாய்களைக் கொன்று குவித்தார் வீரன் சுந்தரலிங்கம்.
அவரது வாள் வீச்சில் ஏராளமானோர் உயிரை இழந்தனர். தலை தப்பியது போதும் என அஞ்சி ஓடினார் ஜாக்சன் துரை. ஆனால் அவருடன் ஓடிய லெப்டினன்ட் கிளார்க்கை வீரன் சுந்தரலிங்கம் வாளால் வெட்டிச் சாய்த்தார்.
பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் கரியப்பன் என்ற கூலியாள் எட்டையபுரம் அரண்மனைக்கு ஒற்றனாகச் செயல்பட்டு வந்ததைக் கையும் களவுமாகப் பிடித்தார். இதற்கு காமாட்சி என்ற அவரது காதலியும் கரியப்பனின் மனைவியும் உதவி செய்தார்ள். எட்டையபுரம் எட்டப்பரின் பட்டத்துக் கதிரையைக் கவர்ந்து வர திட்டமிட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அந்த வேலை வீரன் சுந்தரலிங்கத்தின் தந்தை கட்டக் கருப்பணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பா கடத்திவரப்பட்ட எட்டையபுரத்தின் பேய் குதிரை என்று அழைக்கப்பட்ட அந்த பட்டத்து குதிரை யாருக்கும் கட்டுப்படாமல் சண்டித்தனம் செய்து வந்தது. அக்குதிரையை அடக்க நினைத்தார் கட்டப்பொம்மன்.
எட்டையபுர மாவீரன் சுந்தரலிங்கம் :
பொங்கல் திருவிழா அன்று வீரஜக்கம்மா கோவில் வளாகத்தில் ஜல்லிக் கட்டின் போது காளைகளுடன் அந்தக் குதிரையையும் இறக்கிவிட முடிவெடுத்தார். இந்தக் குதிரையை அடக்குபவர்களுக்கு அக்குதிரையையே பரிசாக வழங்கப்படும் என அறிவித்துக் களத்தில் இறங்க அக்குதிரையை அடக்க யாரும் முன்வரலில்லை மேடையில் இருந்த வீராபாண்டிய கட்டப்பொம்மனும் தளபதியும் திகைத்தனர்.
எட்டையபுரம் பட்டத்துக் குதிரையை அடக்க பாஞ்சாலங்குறிச்சியில் யாருமே இல்லையா? வீரக்கேள்வியைக் கேட்டுக் கொண்டே வீரன் சுந்தரலிங்கத்தை பார்த்தார் கட்டப்பொம்மன். மன்னர் உன் வீரத்தை உலகறியும் படி செய்ய விரும்புகிறார் என்று அமைச்சர் தானாபதி பிள்ளை கூற, அடுத்த நிமிடமே குதிரையை அடக்க களத்தில் நின்றார். மாவீரனைக் கண்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். அந்தப் பேய்க் குதிரையை மடக்கிப்பிடித்து அதன் முதுகில் ஏறி அமர்ந்த அடக்கினார். குதிரைப் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனது.
மாவீரன் சுந்தரலிங்கம் வாழ்க! வாழ்க!!வாழ்க!!! என்று கோஷம் விண்ணைப்பிளக்க கட்டபொம்மன் மேடையை விட்டிறங்கி தனது தளபதியைக் கட்டித் தழுவினார். முதன் முறையாக சொந்த ஊர் செல்லும் வீரன் சுந்தரலிங்கத்திற்கு வீரப்பதக்கங்களை அணிவித்து ராஜமரியாதைச்செய்யும் விதமாக தனது குதிரைப் படையின் ஒரு பிரிவையும் அவருடன் அனுப்பி வைத்தார் கட்டபொம்மன்.
ஆங்கிலேயரை எதிர்த்த வீரத் திருமகன்:
ஆங்கிலேயருக்கும் பாஞ்சாலங்குறிச்சி சமஸ்தானத்திற்கும் நேரடிப்போர் நடந்தது. முதல் நாள் போரில் திறமை முழுவதையும் காட்டிப் போரிட்டு வெள்ளைத் தேவன் வீரமரணம் அடைந்தார். அன்றையப்போரில் விழுப்புண்பட்டு வீழ்ந்த ஊமைத்துரை வீரத்தாய் ஒருவரால் காப்பாற்றப்பட்டு சிவகங்கைச் சீமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கட்டப்பொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் இருப்பது ஆபத்து என்று நாகலாபுரத்திலிருந்து தப்பி புதுக்கோட்டை தொண்டமானிடம் தஞ்சம் புகுந்ததாகவும் ஆனால் தொண்டமான் கட்டப்பொம்மனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்ததாகவும் வரலாறு கூறுகிறது. வீரன் சுந்தரலிங்கம் உயிருக்கு பயந்து எங்கும் தப்பித்து ஓடவில்லை.
வெற்றி அல்லது வீர மரணம் என்பது தான் வீரனின் குறிக்கோளாக இருந்தது. சுந்தரலிங்கத்தை வீழ்த்திவிட்டால் பாஞ்சாலங்குறிச்சி நம் கையில் என்று கும்மாளமிட்டனர். கோட்டைக் கதவுகளை திறந்து ஆங்கிலேயரையும் கூலிப்படையினரையும் வெட்டி வீழ்த்தினார்.
ஆங்கிலேயர்கள் அவரை நெருங்கப் பயந்தார்கள் தனியொருவனாக இருந்தும் எதிரியிடம் சரணடையாமல் தொடர்ந்த போரிட்டார். மூன்று நாள் போரில் சாதித்துக் காட்டினார் வீரன் சுந்தரலிங்கம். நான்காம் நாள் போரில் சொந்த வீரர்களுடன் இருந்து வீரன் சுந்தரலிங்கத்திற்கு சோதனைகள் நெருங்கின. இனனியும் சிறுபடையுடன் போராட முடியாது என உணர்ந்த அவர் ஆங்கிலேய ஆயுத பலத்தை அழிக்கத் திட்டமிட்டார்.
வெள்ளையர்களை வெறும் வாளுடன் சமாளிப்பது எப்படி என யோசித்த வீரன் சுந்தரலிங்கம் பீரங்கிக் குண்டுகளுக்குப் பயன்படுத்தும் வெடிமருந்தக்கிடங்கை அழித்துவிட்டால் ஆங்கிலேயரின் கொட்டத்தை அடக்கிவிடலாம் எனக் கணித்தார். வெடிமருந்து கிடங்கை அழிக்கத் திட்டமிட்டு ஆட்டு மந்மையை ஆவாரங்காடு வழியாக ஓட்டி வந்து கிடங்கிற்கு முன் நிறுத்திவிடச் சொன்னார்.
வீரன் சுந்தரலிங்கம் நுழைவாயிலில் எரிந்து கொண்டிருந்த திப்பந்தத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். இதைப்பார்த்த வெள்ளையச் சிப்பாய்கள் மிரண்டார்கள்.
வெடிமருந்த கிடங்கின் உள்ளே வீரன் சுந்தரலி்ங்கம் வெளியில் கொந்தளிப்புடன் வெள்ளையர் இருப்பதைக் கண்டு மெய்சிலித்தார் வீரன். பாஞ்சாலங்குறிச்சியைக் காப்பாற்றுவது ஒன்றையே மனதில் கொண்ட வீரன் வெடிமருந்து கிடங்கை ஒரு முறைப்பார்வையிட்டான்.
அடுத்த நொடியே வெடிமருந்து பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறின. அக்னி ஜூவாலையின் வெம்மைத்தாங்காமல் நூற்றுக்கணக்கானச் சிப்பாய்கள் உடல் கருகி செத்தனர். பாங்சாலங்குறிச்சி கோட்டையை என் உயிர் இருக்கும் வரை அன்னியன் கையில் விடமாட்டேன். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என் உடல் பொருள் ஆவியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்று முழக்கமிட்டபடி மாவீரன் வீரமரணம் அடைந்தான்.
ஆங்கிலேயப் படைகளால் வெல்ல முடியாத அந்த மாவீரனின் உயிர் விடுதலைக்கான வேள்வியில் வெடிமருந்து கிடங்கில் அடங்கியது. 08.09.1799 அன்று வீரமரணம் அடைந்தார். மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த கவர்னகிரி கிராம மண்ணை இன்றும் மக்கள் வீரமண்ணாகப் பாவித்து பிறந்த குழந்தைகளுக்கு அந்த மண்ணை ஊட்டி வருகின்றனர். அந்த வீரமண்ணைத் தொட்டிலுக்குக் கீழேயும் கொட்டி வைக்கின்றனர். மாவீரன் சுந்தரலிங்கத்தை போன்றே வீரத்துடனும், விவேகத்துடனும் வளர்வார்கள் என்பது இப்பகுதி மக்களிடையே காலம் காலமாய் இருந்து வருமூ நம்பிக்கை. உலக வரலாற்றிலேயே தற்கொலைப்படை பிரிவு என்று ஒரு தனிப்படையை தொடங்கி அதற்கு தன்னையும் தன் முறைப்பெண் வடிவையும் பலியாகத் தந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம்.
இந்தியாவின் ஒரு தென்மூலையில் சுடராய் கொழுந்த விட்டு எரிந்த அடிமை தனத்திற்கு எதிராகப் போராடிய மாவீரன் சுந்தரலிங்கத்தின் பங்கை யாராலும் இனி மறைக்க முடியாது.
தமிழ் வீரனுக்கு வெண்கலச் சிலை:
தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
1997இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது. பின்னர் அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எனப் பொதுப்பெயரிடப்பட்டது. அத்துடன் தமிழ் வீரனுக்கு நினைவாக முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.