0
பாலஸ்தீன மேற்குக் கரை (West Bank) பகுதியில் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கிய மோதல்கள் இரு நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.
நூறாண்டுகளாக தொடரும் துயரம்:
இஸ்ரேல் – பாலஸ்தீனம்: நூறாண்டுகளாகத் தொடரும் துயரமாக ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்கிறது. நூற்றாண்டுகால முடிவிலா மோதலாக பாலஸ்தீனம் உள்ளது. மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர்.
பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, “தேசியப் பகுதி” ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டில் பெத்லஹாம்
யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலஸ்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர்.
ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 – 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.
யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன.
1947ஆம் ஆண்டு பாலஸ்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது. இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இஸ்ரேல் உருவாக்கம்:
1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர்.
அதை பாலஸ்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர்.
அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன.
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது.
போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது ஆரம்பமாகிய ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்கிறது.
20ஆண்டின் பின் பாரிய ராணுவ நடவடிக்கை:
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையான இதில் பன்னிரண்டு பாலஸ்தீனா்களின் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கு எதிராக ஜெனின் அகதிகள் முகாமில் ராணுவத்தினா் தொடங்கிய நடவடிக்கை முழுமையடைந்து விட்டதால் இஸ்ரேலிய ராணுவம் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதக் குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக ஜெனின் நகரிலிருந்து வெளியேறிய மக்கள் அந்த நகருக்கு மீண்டும் வரத் தொடங்கினா். ஜெனின் அகதிகள் முகாம் பகுதியிலிருந்து 500 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 3,000 பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் மின் கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டதால் ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல் நடவடிக்கையில் 12 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், அவா்களில் 5 போ் ஆயுதக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இஸ்ரேல் தரப்பில் ஒரு வீரா் பலியானதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
நெதன்யாகு வலதுசாரி அரசு
இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேற்குக் கரை பகுதியில்
பாலஸ்தீனா்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.மேற்குக் கரையில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 140-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். பாலஸ்தீனா்கள் நடத்திய எதிா்த் தாக்குதல்களில் 24 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், மேற்குக் கரை பகுதியைச் சோ்ந்த ஜெனின் நகருக்குள் திங்கள்கிழமை புகுந்த சுமாா் இரண்டாயிரம் இஸ்ரேல் படையினா், அங்குள்ள அகதிகள் முகாமை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இந்த நடவடிக்கையில் ஆயிரம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், முப்பது ஆயுதக் குழுவினா் கைது செய்யப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னா் இரண்டாவது பாலஸ்தீன கிளா்ச்சியை அடக்குவதற்காக மேற்குக் கரைப் பகுதிக்குள் ஏராளமான இஸ்ரேல் படையினா் புகுந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனா்.அதற்கு அடுத்தபடியாக, அந்தப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை இது என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் நடவடிக்கை குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.