செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தாயக மண்ணின் தமிழ் இலக்கிய வீச்சை கங்காரு நாட்டில் வளர்க்கும் லெ.முருகபூபதி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

தாயக மண்ணின் தமிழ் இலக்கிய வீச்சை கங்காரு நாட்டில் வளர்க்கும் லெ.முருகபூபதி | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி. அவரின் அகவை நாளான ஜூலை 13இல், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது.)

படைப்பாளியின் முதன்மையான வேலை வாசகனின் சிந்தனையில் ஊடுருவுவது தான் படைப்பின் வெற்றியாகும். அதனை வாசகனே தீர்மானித்துக்கொள்வான். எதனையாவது படித்துவிட்டு உங்கள் எழுத்துக்களினால் நான் திருந்திவிட்டேன், மாறிவிட்டேன் என்று எவரும் சொன்னால் அதனைக்கேட்டு மகிழ்ச்சியடையலாம்.

எமது மகிழ்ச்சியை பறைதட்டி முழக்கி சொல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறும் லெ.முருகபூபதி, அவர்களின் “பறவைகள்” நாவல் தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தமது MPhl பட்டத்திற்காக ஆய்வுசெய்துள்ளமை பாராட்டுக்கு உரியதே.

”எழுத்தாளன்” என்ற அடையாளம்தான் எனது முகவரியென்றால், அதனை தக்கவைத்துக் கொள்ளவேண்டியதும் எனது பொறுப்பாகும். ஆயினும் என்னை நேசிக்கின்ற இலக்கியவாதிகள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழ்ந்து,” மனிதன் ” என்ற முகவரியை எனக்கு தந்திருக்கிறார்கள்.

அதனை தக்கவைத்துக்கொள்வதுதான் எனது வாழ்வும் பணியுமாகும் என மெல்பேர்னில் இருந்து தமிழ் முழங்கும் லெட்சுமணன் முருகபூபதி, தன் வாழ்வையே எழுத்துலகிற்கு அர்ப்பணித்து உள்ளார்.

எழுத்து எனது தொழில். இலங்கையில் எனக்கு சோறுதந்த தொழில். அதனால் அதனைவிட்டு நான் அகலமாட்டேன். புகலிடத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்திற்காக உழைத்தபோதிலும் நான் ஊதியம் எதுவும் பெறாமலேயே எழுத்துத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன் எனக்கூறும் முருகபூபதிக்கு தற்போது கனடாவில் எழுத்தாளர் இயல் விருது கிடைத்திருப்பது பெருமைக்கு உரியதாகும்.

எனது வாழ்நாளில் கலை, இலக்கிய வாதிகளை மாத்திரமின்றி அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், சமூக சேவையாளர்கள், பிரமுகர்கள், தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளுக்காக நேரில் சந்தித்திருக்கின்றேன்.

பொதுவாழ்க்கை எனக்கு புதியதல்ல. தாயகத்திலும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டேன். இன்றும் அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் பொது வேலைகளில் ஈடுபடுகின்றேன். இலக்கியம், எழுத்து பொதுவாழ்க்கை என்பனதான் எனது வாழ்க்கை என மெல்பேர்னிலிருந்து தமிழ் முழங்கும் லெ. முருகபூபதி எடுத்துரைக்கின்றார்.

வீரகேசரியில் முதல் ஊடகப்பணி :

ஈழத்து புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர்.
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் பிறந்த லெ.முருகபூபதி வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது என்பது அவரின் வாழ்வியல் சாதனையாகும்.

1985ல் வீரகேசரி ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் -மாணவர் விழாவில் கலந்து கொண்டு , பயண இலக்கியமான “சமதர்மப்பூங்காவில்” நூலை லெ.முருகபூபதி 1990இல் வெளியிட்டுள்ளார்.

லெ.முருகபூபதி சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும் இருந்தவர்.

அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, இங்கு தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைப்பதும் கவனத்துக்குரியது. 2011 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

லெ.முருகபூபதி படைப்புக்கள்:

லெ.முருகபூபதி 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருதும் கிடைத்தது. வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ரஸஞானி, ரிஷ்யசிங்கர் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார்.

1975 இல் வெளியான லெ.முருகபூபதியின் சிறுகதைத் தொகுதியான “சுமையின் பங்காளிகள்”இலங்கை தேசிய சாகித்திய விருது பெற்றது. அத்துடன் சமாந்தரங்கள் (1989),வெளிச்சம் (1998),எங்கள் தேசம் (2000), கங்கை மகள் (2005), நினைவுக்கோலங்கள் (2006), மதக செவனெலி (Shadows Of Memories) – மொழிபெயர்ப்பு (2012), கதைத் தொகுப்பின் கதை (2021),பறவைகள் (2001) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் லெ.முருகபூபதி படைத்துள்ளார்.

சிறுவர் இலக்கியமான “பாட்டி சொன்ன கதைகள்” (1997) என்று பல நூல்களை தமிழ் உலகிற்காய் லெ.முருகபூபதி படைத்துள்ளார். நூறுக்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் பத்தி எழுத்துக்களை தொடர்ந்து எழுதிவருகின்றார். இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் பணி :

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பவற்றை உருவாக்குவதிலும் முன்னின்று உழைத்து வருகின்றார்.

1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என தொடர்ந்து எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.

கடித இலக்கியமான “கடிதங்கள்”(2001), நேர்காணல் சந்திப்பு (1998) இலக்கிய மற்றும் ஊடக வாழ்வில் சந்தித்த ஆளுமைகளின் கருத்துக்களை தொகுத்து எழுதிய நூல், மற்றும் கட்டுரை நூல்களான
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (1995) தமிழ், சிங்கள, முசுலிம், சோவியத் உக்ரைன் இலக்கிய நண்பர்கள் 12 பேரைப்பற்றிய நினைவுத்தகவல்கள், இலக்கிய மடல் (2000), மல்லிகை ஜீவா நினைவுகள் (2001), எம்மவர் (2003), அவுத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரத்திரட்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் அம்பி வாழ்வும் பணியும் (2004), ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள் (2005) , உள்ளும் புறமும் (2011, சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும், சொல்ல மறந்த கதைகள் (2014), சொல்ல வேண்டிய கதைகள் (2017), சொல்லத்தவறிய கதைகள் (2019), இலங்கையில் பாரதி – ஆய்வு நூல் (2019), நடந்தாய் வாழி களனி கங்கை (2021), யாதுமாகி (2022), வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (2022) என இதுவரையில் பல நூல்களை லெ.முருகபூபதி தமிழ் இலக்கியத்திற்காக படைத்துள்ளமை வரலாற்றுச் சாதனையாகும்.

தேசிய சாகித்திய விருதுகள்:

பரிசுகள் உச்சங்களை தீர்மானிப்பதில்லை. வாசகர்களிடம் பெறும் வரவேற்புத்தான் உச்சம். சிறுகதைகளை படிக்கும் வாசகனின் சிந்தனையில் அது ஊடுருவவேண்டும்.

படித்த பின்னர் சில காலம் ஏன் நெடுங்காலம் வாசகரின் மனதில் ஒரு சிறுகதை நின்றால் அதுதான் உச்சம்.
எனது சில கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்க பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்த்தவர்கள் பார்வையில் அவை உச்சமாக இருந்திருக்கலாம் எனக் கூறும் லெ.முருகபூபதி பெற்ற விருதுகள் பல. சுமையின் பங்காளிகள் நூலுக்கு 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

“பறவைகள்” நூலுக்கு 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதும் கிடைத்தது. அத்துடன் 2002 அவுஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருதும் கிடைத்தது.

புலம்பெயர் இலக்கியம்

புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து இலக்கியம் படைத்த பின்னர்தான் பேசுபொருளானது.போர் குறித்து எழுதினால் அது போர்க்கால இலக்கியம். புலம்பெயர்ந்தவர்கள் எழுதினால் அது புலம்பெயர் இலக்கியம் என்று வகைப்படுத்திவிட்டார்கள்.

அவற்றை வாசிக்கும் வாசகர்களும் விமர்சகர்களும்தான் போர்க்கால இலக்கியம் , புலம்பெயர் இலக்கியம் முதலான சிமிழுக்குள் அடைக்கிறார்கள். ஒருவர் வெளிநாட்டுக்கு புலம்பெயராமலேயே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைக்கலாம் என வகைப்படுத்தும் முருகபூபதிக்கு அவுஸ்ரேலிய பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது 2012இல் கிடைத்தது. பின்னர் அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதையும் முருகபூபதி பெற்றார்.

புலம்பெயர் இலக்கியப் பணி :

“கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது
என்பதில் நான் திடசித்தமானவன்”என்ற வால்டேயரின் கூற்றுடன் உடன்பாடு மிக்கவன். இலக்கிய உலகில் பயிலத் தொடங்கிய நாள் முதலாக அல்ல, அதற்கும் முன்பே எனது இயல்பு அப்படித்தான். எனவே, கலை, இலக்கிய தேவை நிமித்தம் நான் சந்தித்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் அனுபவங்களையும் பதிவு செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்த முருகபூபதிக்கு
அவருன் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் “ரஸஞானி”என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியும் வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மாணவர் கல்வி நிதியம்:

ஈழத்தில் நீடித்த போரில் தந்தைமாரை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் “இலங்கை மாணவர் கல்வி நிதியம்” (CEYLON STUDENTS EDUCATIONAL FUND) என்ற அமைப்பை ஸ்தாபித்து,
இந்த அமைப்பு தமது பணியில் 27 ஆண்டுகளை நிறைவுசெய்து தொடர்ந்தும் இயங்குகிறது என்றால் அதற்குரிய பெருமைக்குரியவர் லெ.முருகபூபதிக்கே உரித்தாகும்.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்தும் பயனடைந்து வருகின்றனர்.இன்றும் இந்த அமைப்பின் ஊடாக பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் உதவியை பெறுகின்றனர். போர் முடிவுக்கு வந்ததும் வருடம்தோறும் அங்கு சென்று மாணவர்களை நேருக்கு நேர் சந்தித்து உதவிகளை இக்கல்வி அமைப்பு மேற்கொள்கிறது. இந்தப்பணியில் பலரும் இணைந்து தாயக மாணவர்களுக்காக உதவி வருகின்றனர்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More