போரின் கொடுமைகளும், தமிழரின் நீண்டகால துயரமும் அவலமும் துயரங்களும் அகதனுள்ளே வலிகள் நெருப்பாக இன்னும் நீண்டு கொள்கிறது. 1956 இல் தொடங்கிய தமிழர் இனவழிப்பு மே 2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் உச்சமாக நடைபெற்று, இன்னமும் தமிழர் மீதான அடக்குமுறைகள் தொடரும் நிலையில் இழந்துபோன ஓர் தேசத்தின் கனவுச் சிதறல்களாக பதிந்து நிற்கும் கவிதைகளும், ஆக்கங்களுமே ஈழப் போர் இலக்கியத்தில் முதன்மையாகிறது.
கறுப்பு ஜூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை செயற்பாடாகவே நம்பப்படுகிறது.
பாறாங் கல்லெனவே தமிழர் நெஞ்சில் ஆறாமற் கிடக்கும் நினைவுகள் தற்போது எழுத்துருப் பெற்று வருகின்றன. அதனுள் கறுப்பு ஜூலை -ஆடிக்கலவரம் 1983 திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வின் பதிவுகளே ஈழப்போர் இலக்கிய பிறப்பாக உருவகங் கொள்கின்றன.
1984 கறுப்பு ஜூலையினை “இனக்கலவரம்” என்ற போர்வைக்குள் நடைபெற்றது தமிழர் மீதான “இனப்படுகொலை” நிகழ்வாகும். உண்மையில் இக்கோர கறுப்பு ஜூலை நிகழ்வுகளே ஈழத்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட தூண்டியது என்று கூறலாம்.
மூன்று தசாப்தகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் அகிம்சை போராட்டம் தோற்றுப் போக தமிழ் இளைஞர்கள் மத்தியில் புரட்சிகர ஆயுதப் போராட்டமாக மாறுவதற்கு தேவையான வலிமையை கறுப்பு ஜூலை வலிகளில் இருந்தே ஈழத்து தமிழ் மக்கள் பெற்றார்கள். இதன் மூலம் எழுந்த இந்த போராட்ட இலக்கியங்கள் வாழ்விடத்தை தொலைத்த அவலத்தையும், மக்கள் படும் துயரத்தையும் முன்னிறுத்தி இந்தப் படைப்புகள் உருவாகி வெளிவந்தன.
1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் பின்னணியை சித்திரிக்கும் நாவலாக மு.தளையசிங்கம் எழுதிய “ஒரு தனி வீடு” இலங்கையில் வெளிவந்தது.அவரது முதல் நாவலான ஒரு தனி வீடு 1962 இல் எழுதப்பட்டு 1984 இல் அவர் இறந்து 22 வருடங்களுக்குப் பிறகு தான் வெளிவந்தது.ஈழத்தமிழருக்கு தனிநாடுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும் என்ற செய்தியைக்கூறும் படைப்பாகவும், இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு முதலான மார்க்ஸீய – கம்யூனிஸ சுலோகங்களை விமர்சிக்கும் நாவலாகவும் ஒரு தனி வீடு அமைந்தது.
கவிஞர்களின் மரணத்துள் வாழ்வோம்:
1985இல் ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற பெயரில் உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகிய நால்வரும் தொகுத்து ஒரு போரியல் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார்கள். முதலில் யாழ்ப்பாணம் தமிழியல் வெளியீடாகவும், பின்னர் கோவை விடியல் பதிப்பகத்தின் வாயிலாக உப்பிலிபாளையத்திலிருந்து 2வது பதிப்பாக டிசம்பர் 1996 இலும் இந்த நூல் 170 பக்கங்களில் வெளிவந்திருந்தது.
ஈழத்தின் 31 இளம் கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பில் மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.
ஈழத்தின் போர்க்கால கவிதைத்துறையில் நினைவு கொள்ளத்தக்க மற்றொரு கவிஞர் மறைந்த கி.பி.அரவிந்தன் ஆவார். பிரான்ஸ் தேசத்தில் புலம் பெயர்ந்து, வாழ்ந்து காலமான இவர் ஈழப் போராட்டத்தில் விடுதலைப் போராளியாக இருந்தவர்.
இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. மூன்று படைப்புக்களை தமிழகத்திலிருந்து வெளியீடு செய்தவர் இவர். இனி ஒரு வைகறை அவர் எழுதிய முதலாவது கவிதைத் தொகுப்பாகும்.
1992 இல் வெளியான முகம்கொள் கி.பி.அரவிந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ஆகும். கனவின் மீதி. இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியாகும். கி.பி.அரவிந்தனின் கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப் பட்டுள்ளன எனக்கூறலாம்.
செங்கை ஆழியானின் ஈழப் போர் இலக்கியம் :
ஈழத்து போர்க்கால நாவல் இலக்கிய வரலாற்றில் படைப்பாளுமை மிக்கவர் செங்கை ஆழியான் ஆவார். மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் எனும் பெருமைக்குரிய செங்கை ஆழியானின் புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் என அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
1977 இனக்கலவர ஆவணம்:
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இனக்கலவரத்தின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச வன்முறைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதிய “24 மணி நேரம்”என்கிற நூல் முக்கியமான வரலாற்று ஆவணமாகும். ஈழத்து போர்க்கால வரலாற்றினை சிறுகதை, நாவல் இலக்கியமாக எதிர்கால சந்ததிக்கு வெளிப்படுத்திய
படைப்பாளுமை மிக்க செங்கை ஆழியானின் பணி ஈழ வரலாற்றில் என்றும் போற்றப்படும்.
செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சி மிக முக்கியமானது ஆகும். மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய “12 மணி நேரம்” என்கிற நூல் இயற்கை இடரின் துயரத்தை வரலாற்று வரிகளாக்கிய நூலாகும். இந்த இரண்டு நூல்களையும் நீல வண்ணன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்.
‘தீம்தரிகிடதித்தோம்’ நாவல் :
ஈழப்போராட்த்தின் மூல வேர் எது என்பதை அரசியல் பின்னணியோடு தொட்டுக் காட்டுகிறது ‘தீம்தரிகிடதித்தோம்’ எனும் நாவல்.
இந்நாவலில் இலங்கை அரசாங்கம் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவந்த போது மலர்ந்த கற்பனை காதல் கதையை சொல்கிறது.
சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்ட போது தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பல்ம், சி. சுந்தரலிங்கம் போன்ற முதுபெரும் தலைவர்கள் சாத்விக முறையில் கிளர்ச்சி நடத்தி, தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்ததை வெளிப்படுத்தும் இந்நாவலும் ஓர் வரலாற்று நூலாக எழுகிறது.
இந்நாவலில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்கள மொழிச் சட்ட விவாதம் நடந்த போது எடுக்கப்பட்ட குறிப்புகளும், விவாதமும் காட்டப்பட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தமிழ் இளைஞனுக்கும் சிங்களப் பெண்ணுக்குமான காதல் களம் காட்டப்பட்டிருக்கும். நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்து போகும்.
அத்தோடு அறவழியில் நடந்த போராட்டத்தை ‘சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான போர்’ என்று திசைதிருப்பு, அன்றைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா, காவல்துறையின் துணையோடு சிங்கள சமூக விரோதிகளை ஏவிவிட்டு போராடிய ஈழத்தமிழர்களை அடித்து நொறுக்கினார். பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள் வாழக்கூடிய தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடி அமர்த்தினார். பொருளாதார, சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தினார். தமிழ் மக்களின் அனைத்து எதிர்ப்புகளை மீறி சிங்களத்தை மட்டுமே ஆட்சி மொழியாக்கினார்.
தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தர குடிமக்களாக்கும் பிரிவினை உணர்வை ஏற்படுத்தினார். சிங்கள ஆட்சியின் கொடுமையை இனியும் சகிக்க முடியாது என்ற சூழ்நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் இந்நாவல் சித்தரிக்கிறது.
திட்டமிட்ட இனப் படுகொலைகள்:
சிங்கள அரசுகளால் 1977, 1983 ஆண்டுகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவர வன்முறைகளும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தையும் தனி நாடு ஒன்றிற்கான தேவையையும் வலியுறுத்தின. இந்த காலகட்ட போராட்ட வாழ்வே ஈழ இலக்கியப் படைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடமுண்டு.
1981இல் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாணப் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகிய தமிழரின் அறிவியல், ஊடகவியல் நிறுவனங்களை சிங்கள அரசின் கூலிப்படைகளால் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட சம்பவமானது, அதுவரை காலமும் கொரில்லாப் போராட்டமுறைகளை இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றி வந்த சூழல் மாறி, அறிவுசார் புத்திஜீவிகளையும் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்தது.
ஈழத்தின் போரியல் வரலாற்றுக் காலகட்டத்தில் வெளியான அனைத்து இலக்கியப் படைப்புக்களும் போராட்டம் சார்ந்தவையல்ல. போராட்டத்தின் வலிகள், உடன்பிறப்புக்களின் இழப்புக்கள், கொடூர வன்மங்கள், உடமைகளின் அழிப்புக்கள், இடப்பெயர்வின் அவலங்கள், புலம்பெயர்ந்து சென்ற உறவுகளின் பிரிவுத் துயர், போராளிகளின் வீரதீரங்கள், மானிடத்தையும் பெண்மையையும் இழிவுபடுத்தும் சித்திரவதை என ஒரு போராட்ட வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் போரியல் இலக்கியங்கள் தொட்டுச் செல்கின்றன
புதுவை இரத்தினதுரை கவியுகம்:
கவிஞர் புதுவை இரத்தினதுரை ‘வியாசன்’ என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு “வியாசனின் உலைக்களம்” எனும் நூலாகும். போரியலையும் அது சார்ந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளையும் சுழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு ஆணி வேறாகத் தனது பேனாமுனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு யாழ்ப்பாணம் நங்கூரம் வெளியீடாக, பங்குனி 2005இல் வெளியானது. இத்தொகுப்பில், வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993இல் வெளிவந்த “தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே” என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம் சஞ்சிகையின் மாசி 2005இல் வெளியான “இருந்ததும் இல்லையென்றானதும்” என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155 கவிதைகள் இடம் பிடித்திருக்கின்றன.
1981 யாழ் நூலகம் எரிப்பு :
ஈழ ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாக பல நூல்கள் ஆரம்பகாலத்தில் வெளிவந்திருந்தன. பண்டிதர் க.பொ.இரத்தினம், கவிஞர் காசி ஆனந்தன் போன்றேரின் விடுதலை உணர்ச்சிமிக்க படைப்புகளை சுதந்திரன், தீப்பொறி போன்ற அரசியல் ஏடுகள் எழுபதுகளில் தாங்கி வந்தன.
சிறிலங்கா அரசின் பாரிய வன்முறை கெடுபிடிகளுக்கு மத்தியில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரசுரங்களை தாயக மண்ணில் வெளிப்படையாக அச்சிட முடியாத நிலை அக்காலத்தில் காணப்பட்டது.
அத்துடன் ஆரம்பகால விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு போராட்ட அமைப்புக்களும் தமது தளங்களை தமிழகத்திலும் கொண்டியங்கியதால் அக்காலகட்ட வெளியீடுகள் அதிகளவில் தமிழகத்தில் அச்சிடப்பெற்று, தாயகத்துக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
அதேவேளை இனவிடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த துணிச்சலுடன் முன்வந்த பல ஈழத்துப் படைப்பாளிகளும் அந்நாட்களில் புனைபெயரினுள் மறைந்திருந்தே இத்தகைய இலக்கியங்களைப் படைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதும் உண்மையே.
ஈழத்தின் போரியல் வரலாறு:
ஈழத்தின் போரியல் வரலாற்றுக் காலகட்டத்தில் வெளியான அனைத்து இலக்கியப் படைப்புக்களும் போராட்டம் சார்ந்தவையல்ல. போராட்டத்தின் வலிகள், உடன்பிறப்புக்களின் இழப்புக்கள், கொடூர வன்மங்கள், உடைமைகளின் அழிப்புக்கள், இடப்பெயர்வின் அவலங்கள், புலம்பெயர்ந்து சென்ற உறவுகளின் பிரிவுத் துயர், போராளிகளின் வீரதீரங்கள், மானிடத்தையும் பெண்மையையும் இழிவுபடுத்தும் சித்திரவதை என ஒரு போராட்ட வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் போரியல் இலக்கியங்கள் தொட்டுச் செல்கின்றன.
சர்வதேச வரலாற்றில் ஈழத்தமிழரின் தனித்துவமான இலக்கியமாக உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்புக்களில், நின்று நிலைத்திருக்கப்போகும் வலிமைபெற்ற போரியல் இலக்கியத்தின் நீட்சி இன்னமும் தொடர்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு பிறகு இலங்கை சுதந்திரத்தின் பின்னர்,சின்னஞ்சிறு மாங்காய்த் தீவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த கால கட்டத்தின் தமிழர்களின் அடையாள அரசியல் என்பது இலக்கியம், கவிதைகளின் மூலம் தெறித்து வந்தது. மேலும் முற்போக்கு சார்ந்த இலக்கியங்கள் ஏராளமாக வரத்தொடங்கின. இந்த இலக்கியங்கள் சமுதாய மாற்றத்தை உள்ளடக்கியும் இருந்தன. இந்த காலகட்டத்தில் வந்த இலக்கிய படைப்புகள் இலங்கை தமிழ்ச் சூழலில் பெரிய வெளிச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தின.
குறிப்பாக 1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் இலக்கிய போக்குகளில் பல மாற்றம் அடைந்திருக்கின்றன. தமிழரின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் சாத்விகப் போராட்டங்களின் வழியாக அடக்குமுறைகளுக்குத் தீர்வுகாண முயன்று தோல்வி கண்டமை இன்று வரலாறாகி விட்டது. இலங்கையில் தமிழரின் விடுதலைப் போராட்டம் சாத்வீகப் போராட்ட நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமுறைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்ற எழுபதுகளின் இறுதிப்பகுதிகளிலேயே போரியல் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே வெளிவர ஆரம்பித்து விட்டன.
செம்மணி கோரம்:
‘செம்மணி’என்ற தலைப்பில் வெளியான நூலி;ல் 24 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. வெளிச்சம் வெளியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகத்தின் நடுவப் பணியகம், செப்டெம்பர் 1998இல் இத்தொகுப்பை வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கான கவிதைகள் இவை.
1995இல் ரிவிரச என்ற யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின்பின், தென்மராட்சியிலும்; வடமராட்சியிலும் தஞ்சமடைந்த தமிழ்மக்களை மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைமூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அக்காலகட்டத்தில் சிங்கள இராணுவம் அவர்களை யாருங்காணாமற் பிடித்துச்சென்று படுகொலைசெய்து செம்மணியிற் புதைத்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. செம்மணிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன.
சிறுகதை, நாவல் இலக்கியத் துறையில் போரியல் பதிவுகள் ஏராளமாக ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 1980களிலிருந்து ஈழத்தில் வெளியாகும் சிறுகதைகளில் இதன் பாதிப்பு பெரிதளவில் இருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக வன்னி மண்ணிலிருந்து வெளியாகும் படைப்பிலக்கியங்கள் அனைத்திலும் இதன் பாதிப்பு துலக்கமாகத் தெரிகின்றது.
இலங்கை அரசுகள் கொண்டு வரும் கொடூர சட்டங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது இலக்கியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. 1980 ஆண்டுக்கு பிறகு போர் சூழல் குறித்த இலக்கியங்கள் ஏராளமாக வந்தன. போர் அவலம் என்பது 30 ஆண்டுகாலமாக தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த கால கட்டத்தில் ஏராளமான ஆண், பெண் படைப்பாளர்கள் உருவாகி போர் சூழல், தமிழ் மக்களின் துயரம் குறித்த படைப்புகளை உருவாக்கினர். போரில் ஈடுபட்டவர்களும், போரை வெளியில் நின்று பார்த்தவர்களும் ஏராளமான புதிய படைப்புகளை உருவாக்கினர். போருக்குப் பிறகு இப்போது ஏராளமான புலம் பெயர் இலக்கியங்கள் உருவாகின.