நேற்றும் ஒரு
மனிதப் புதைகுழியைத்
தோண்டினார்களாம்.
எடுக்க எடுக்க
எச்சங்கள் வந்தனவாம்.
எரியும் என்வயிற்றை
எதைக்கொண்டு அணைக்க.
இந்தப்
புதைகுழியிலாவது
என் பிள்ளையைக் கண்டடைய
கருணை காட்டு இறைவா
கைகள் குவிக்கிறேன்.
பஞ்சாயுதம் பொருத்திய
கறுப்புக் கயிறு.
விளையாட்டின்போது
உடைந்து பொருந்திய
இடது முழங்கை.
மூக்கின் அருகாகவொரு
மண்ணிற மச்சம்.
பிள்ளையின் அடையாளங்கள்.
உண்டி சுருங்கி
உடல்தளர்ந்து
எஞ்சியிருப்பது இந்தக்
கூடு மட்டும் தானே.
தேடித் தேடித்
தேய்ந்தவை என்
செருப்புகள் மட்டுமல்ல
முழங்காற் சில்லுகளும்தான்.
நாளுக்கு நாற்பது
மாத்திரை இல்லையேல்
நான் பிணம்.
இப்போது மட்டுமென்ன
உயிர்ப் பிணமா
அரைப் பிணம் தானே.
தூக்கம் வரவில்லை
இருள் அப்பிக்கிடக்கும்
இரவுப்பொழுதில் மழை.
அகப்பட்டவற்றை எல்லாம்
வாரி இழுத்தபடி
வழிந்தோடுகிறது வெள்ளம்.
முகமலர்ந்து முத்தாடியபின்
உலர்ந்துபோன ஊதாப்பூவாய்
நிறமிழந்து கிடக்கிறது
என் வானம்.
ஆதிலட்சுமி சிவகுமார்