செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தமிழக வீரர் சுதர்சன் சதம் குவித்து அசத்தல் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

தமிழக வீரர் சுதர்சன் சதம் குவித்து அசத்தல் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

2 minutes read

கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவுக்கான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணியை 8  விக்கெட்களால் இந்திய ஏ அணி இலகுவாக வெற்றிகொண்டது.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், நிக்கின் ஜோஸ் பெற்ற அரைச் சதம், ராஜ்வர்தன் ஹங்கார்கேகார் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இந்திய ஏ அணியின் வெற்றியை இலகுபடுத்தின.

இந்த சுற்றுப் போட்டிக்கான இரண்டு குழுக்களிலும் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக இந்திய ஏ அணி அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி தோல்வி அடைந்த போதிலும் அரை இறுதியில் விளையாடுவதை இந்தியாவுடன் ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் புதன்கிழமை (19) நடைபெற்ற பகல்-இரவு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கசிம் அக்ரம் (48), ஷாபாஸ்  பர்ஹான் (35), முபாசிர் கான் (28), ஹசீபுல்லா கான் (27), மெஹ்ரான் மும்டாஸ் (25) ஆகிய ஐவரே 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ராஜ்வர்தன் ஹங்கார்கேகார் 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மனவ் சுதார் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

206 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 48 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

சாய் சுதர்ஷன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் 3 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி  இந்திய ஏ அணியின் வெற்றியை இலகுபடுத்தினார்.

ஆரம்ப விக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவடன் 58 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் நிக்கின் ஜோஸுடன் 99 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் யாஷ் துல்லுடன் 53 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷன் பகிர்ந்தார்.

சாய் சுதர்ஷன் 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இந்திய ஏ அணியின் வெற்றிக்கு மேலும் 15 ஓட்டங்களே தெவைப்பட்டது.

ஆனால், சாய் சுதர்ஷன் சதம் குவிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த யாஷ் துல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஓட்டங்கள் பெறுவதைத் தவிர்த்தார். 35 ஓவர்கள் நிறைவில் சாய் சுதர்ஷனுடன் கலந்துரையாடிய துல், அவர் சதம் குவிப்பதை உறுதிசெய்தார்.

36ஆவது ஓவரில் ஒரு பவுண்டறியையும் 2 சிக்ஸ்களையும் விளாசிய சுதர்ஷன் சதத்தைப் பூர்த்திசெய்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.

110 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்ஷன் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைவிட நிக்கின் ஜோஸ் 53 ஓட்டங்களையும் யாஷ் துல் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்கைளயும் அபிஷேக் ஷர்மா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தப் போட்டி முடிவை அடுத்து பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் விளையாடவுள்ளன.

அதே தினம் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் (பகல் இரவு) பங்களாதேஷ் ஏ அணியை இந்திய ஏ அணி எதிர்த்தாடும்.

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More