உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அதனையடுத்து முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டனர்.
புளூ டிக் பெற கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பதிவுகளையே பயனாளர்கள் பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில மாற்றங்களால், ட்விட்டரின் விளம்பர வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில், ட்விட்டரை முன்கொண்டு செல்லும் நோக்கில், அந்நிறுவனத்தின் புதிய பணிப்பாளராக லிண்டா யக்காரினோ பதவியேற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் மஸ்க் வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றில், விளம்பர வருவாய் சீராக சரிவடைந்து வருகிறது. இதனால், ட்விட்டரை மீட்டெடுக்கும் பல்வேறு கடைசி கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன என பதிவிட்டார்.
அத்துடன், உலகம் பற்றி புரிந்து கொள்வதற்காக, புதிதாக எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் என சமீபத்தில் கூறினார்.
மேலும், மஸ்க் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ட்விட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்ததுடன், வர்த்தக குறியீடாக உள்ள ட்விட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், ட்விட்டரின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது பயனாளர்களின் கேள்வியாக உள்ளது.
And soon we shall bid adieu to the twitter brand and, gradually, all the birds
— Elon Musk (@elonmusk) July 23, 2023