உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவுப்பொருளாக அரிசி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டால் அரிசி விலை உயரக்கூடும் என்ற கவலை வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே, கனடா முதல் அமெரிக்கா வரை, மலேசியா முதல் ஆஸ்திரேலியா வரை அவசர அவசரமாக மக்கள் கடைகளில் அரிசி வாங்கி சேர்த்து வருகின்றனர்.
கடைகளுக்கு அரிசி பைகள் வந்திறங்கியதுமே விறுவிறு விற்பனையால் மாயமாய் மறைந்துவிடுகின்றன.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோகிராம் அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.