செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புதைகுழிகளின் நாடு | பிரியங்கன்

புதைகுழிகளின் நாடு | பிரியங்கன்

1 minutes read

புதைகுழிகள் பூக்கும் தேசமொன்றில்
புதைக்கப்பட்ட சனங்களின்
இனத்திலிருந்து ஒருவனாய் பேசுகிறேன்

வலியும் வேதனையும் வரமாய் பெற்றுவந்த
வம்சமொன்றின் பிள்ளையாய் – கொலையுண்ட ஆன்மாக்களின் சுவடுகளின் மீதிருந்து பேசுகிறேன்

என் சிங்களத்து நண்பனே
என்னை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
உன்னிடம் உன் மூதாதைகள் எங்களைப்பற்றி
ஏதேதோ சொல்லியிருக்கலாம்

நாங்கள் உங்கள் நாட்டை பிரித்து கேட்பதாயும்
குண்டுகள் கட்டி கொலைகள் புரிந்ததாயும்
இன்னும் குழப்பங்களை விளைவிக்கும்
குழப்படிகாறர்களாயும் சொல்லப்பட்டிருக்கலாம்

நானும் என்னைப்போன்ற என் மனிதர்களும்
உன்னைப்போலவே கையும் காலும் பொருத்தப்பட்ட சதைப்பிண்டங்களில் உயிர்பெற்ற உடலங்களோடுதான் இன்றுவரை உலாவிக்கொண்டிருக்கிறோம்

ஆனால் உன்னைப்போல சுதந்திர தேசமொன்றில்
வாழக்கிடைக்கவில்லை எங்களுக்கு ஆதலால்
எங்கள் நிலங்களை கோரினோம்
எங்கள் உரிமைகளைக்கோரினோம்
ஒடுக்கப்பட்டபோதும் எம் உயிர் பறிக்கப்பட்டபோதும்
உயிர்காக்கப்போராடினோம்

உனக்கொன்று தெரியுமா நீ வாழும் இதே நிலத்தில்
எங்கள் பாட்டனுக்கும் பூட்டனுக்கும்
அன்று பூரண உரித்திருந்தது ஆனால் இன்றெங்களுக்கு இல்லையென்கிறார்கள்

அன்றுதொட்டு இன்றுவரை எங்கள்
சுயங்கள் வேரூன்றிய நிலத்தில்
வாழ்ந்து வந்திருக்கிறோம் ஆனால் இன்று
அந்த நிலங்களில் புதைக்கப்பட்டு மட்டுமேயிருக்கிறோம்

இப்போது உங்களில் பிறந்து இடையில் வளர்ந்தவர்களுக்கு எல்லைகள் கடந்து நிலம் பிடிக்கத்தோணியது
என் வீட்டு முற்றத்தில் தன் பஞ்சீலக்கொடிநாட்ட
தோணியிருக்கிறது
எங்களில் பலரைக்கொன்று புதைக்கவும் தோணியிருக்கிறது
இன்று நாங்கள் தோண்டத்தோண்ட
எங்கள் இனத்துப்பிள்ளைகளின் எலும்புகளைத்தான் எடுக்கின்றோம்

உயிர்கொண்ட மனிதம்
புதைகுழிகளில் புதைக்கப்பட்டு
புனிதநீராடிப்போதுமாதவனுக்கு
அர்ப்பணமாக்கப்பட்டிருக்கிறது

நண்பனே உண்மையில் நிலம் கேட்டோம்
எங்கள் பாட்டனும் பூட்டனும் உரிமையோடு
வாழ்ந்த நிலத்தை கேட்டோம்

அதனால் இன்று உங்களால் கொல்லப்படுகிறோம்
அதே நிலத்தடியில் புதைக்கப்படுகிறோம்

மாவும் பலாவும் வாழையும் நடவேண்டிய
நிலத்தில் பிணங்களை நட்டார்கள் பச்சக்குழந்தைளுக்குக்கூட
பயங்கரவாதிகளென பெயரும் இட்டார்கள்

நண்பனே உன்னிடம் ஒன்று கேட்கிறேன்
உன் அப்பாவின் அப்பப்பாவின் நிலத்தையும்
அதன் மீதுன் உரிமைகளையும் கோரினால்
நீ பிரிவினைவாதியா

உன்னை தார்பீப்பாயில் போட்டு எரிக்கலாமா
உன் அக்கா தங்கைகளை நிர்வாணமாக்கி வண்முணரலாமா

உன் பிஞ்சுகளையும் சிதைக்கலாமா
உன் உறவுகளை கொன்று புதைக்கலாமா

அப்படி என் கேள்விகளுக்கு நீ ஆம் என்றால்
நான் பயங்கரவாதியாய்
பிரிவினைவாதியாய்
குழிகளில் கொன்று புதைக்கப்பட வேண்டியவனாய்
இருக்கிறேன்

அதுவரை குழிகள் பூக்கும் இந்த
நிலத்தையும் அதன் கொலைக்கொடூர மனங்களையும்
பேசிக்கொண்டேயிருக்கிறேன்

என் சிங்கள நண்பனே
என்னை நீ புரிந்துகொள்ளும்வரை
இங்கு புதைகுழிகள் பூக்கும்
நானும் என் அண்ணன் தங்கைகளும்
அடிக்கடி கொன்று புதைக்கப்படுக்கொண்டேயிருப்போம்

இது புதைகுழியின் நாடாகவேயிருக்கும்.

பிரியங்கன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More